சென்னையில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.


இந்தியாவில் அதிக இருச்சக்கர வாகன ஓட்டிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் இரண்டரை கோடி பேர் இருச்சக்கர வாகனங்களை தங்கள் போக்குவரத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சாலைப் பாதுகாப்பு விதிகளை மதிக்காதவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலமாகவும், சாலை விபத்துகளால் உயிரிழப்போரையும் அதிகம் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு இருந்து வருகிறது.




சென்னையில் கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களால் மட்டும் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதில் 477 பேர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாலும், ஹெல்மெட் அணியாமல் பின்னிருக்கையில் அமர்ந்து வந்த 134 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பல்வேறு விபத்துகளில் 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.


கடந்த 5 மாதங்களில் இரு சக்கர வாகனம் மூலமாக 841 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், 127 பேர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. இது போன்று தொடர் விபத்துகளை சரி செய்யவும், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.




ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டினாலே உயிரிழப்புகளை குறைக்கலாம் என்ற அடிப்படையில் அதை சென்னை காவல்துறை கட்டாயமாக்கியுள்ளது. இந்த விதி ஏற்கனவே அமலில் இருந்தாலும், விதியை மீறுபவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.


இன்று முதல் தீவிர வாகனத் தணிக்கை இருக்கும் என்றும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்து விதிகளை மீறுபவர்கள் என்று இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.




விதிகளை மீறுவோரை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணிகளில் சென்னையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்துக் காவல்துறையினர் ஈடுபட உள்ளதாக போக்குவரத்துக் காஅவல்துறிஅ தெரிவித்துள்ளது.