சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தததையடுத்து சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமி கணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பெண் ஒருவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து பிரசவித்த பெண் மிகவும் சிறிய பெண்ணாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணின் விவரங்களை சேகரித்ததில் அந்த பெண் 17 வயது சிறுமி என்று அறிந்ததும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் குறித்து மேலும் சில விவரங்கள் கேட்டபோது அந்த சிறுமியால் எதுவும் சொல்ல தெரியவில்லை. இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்யமுடியாமல் காவல்துறையினர் தவித்தனர். அதன் பின்பு குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் லாபகமாக விசாரணை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும், தனக்கும் இரு வீட்டார் முன்னிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 25 ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் முகப்பேரில் வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்ததாகவும், அந்த சிறுமி தனது கணவர் சதீஷ்குமார் தற்போது அம்பத்தூருக்கு வேலைக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுமி வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறைக்கு ஒப்படைக்க, மனைவிக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாக கூறி சதீஷ்குமாரை காவல்துறையினர் வரவழைத்தனர்.
தனது மனைவிக்கு பாப்பா பொறந்திருக்கு என்று மகிழ்ச்சியுடன் சாக்லேட் வாங்கிவந்த சதீஷ்குமாரை மடக்கிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மனைவியை திருமணம் செய்தவதற்கு முன்புதான் பெண்ணின் வயது தனக்கு தெரியாது என்றும், திருமணத்திற்கு பின்புதான் அவர் 17 வயது சிறுமி என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்தார்.
ஆதார் அட்டை அடிப்படையில் சிறுமிக்கு திருமணத்தின் போது 16 வயது என்றும் தற்போது 17 வயது என்பதையும் உறுதிப்படுத்திய போலீசார் சதீஷ்குமாரை கைது செய்ய சட்ட ஒப்புதல் பெற்றனர். தொடர்ந்து, வயது பூர்த்தியாகாத மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய குற்றத்திற்காக சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ்குமார் புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்