சென்னையில் பெய்த கனமழை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் இலங்கை அருகே நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று (29.11.2023) முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மாநகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 


 அசோக் நகர் அருகே சாலையில் செல்போன் பேசியபடி நடந்துசென்ற மணிகண்டன் என்பவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். அதன் காரணம் குறித்து விசாரித்தபோது செல்போன் பேசிய கொண்டிருந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.


இதேபோன்று தி.நகரில் மின்கம்பம் அருகே ஒருவர் மழைக்கு ஒதுங்கியிருக்கிறார். அப்போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் அசாமைச் சேர்ந்த அப்பு அனிப் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருவரின் உடலை பிரேதபரிசோதானைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தியாகராய நகர், அசோக் நகர், தேனாம்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கே.கே. நகர் பர்னபி சாலை, அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.  தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், வேலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


வானிலை எச்சரிக்கை


தென்கிழக்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய   ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30-11-2023) காலை 0830 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 03-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 அதிகாலை  வாக்கில்  வடதமிழகம்- தெற்கு ஆந்திர  கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்.


மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.     


30.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


01.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


02.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.