மாண்டஸ் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கன மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள வேகவதி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக வேகவதி ஆற்றில் சுமார் 2000 கனஅடி வெள்ள நீரானது ஆர்ப்பரித்துக்கொண்டு செல்கிறது. இதன் காரணமாக வேகவதி ஆற்றங்கரையோரமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தாயார்குளம், மந்தவெளி, தாட்டித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வேகவதி ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் வெள்ள நீரானது உள் புகுந்து  அப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

 



 

இந்த பெரும் வெள்ளப்பெருக்கினால் குடியிருப்புகளில் சிக்கி தவித்த பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு அவர்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று வேகவதி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் சுமார் 1200கன அடி நீரானது சென்றதால், காஞ்சிபுரம் மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட  நாகலத்து மந்தவெளி பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரமாக வசித்த பொது மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீட்டினுள்ளையே தஞ்சமடைந்தனர்.



 

இதுகுறித்து தகவல் அறிந்த  காஞ்சிபுரம் மாநகராட்சி 32- வது வார்டு மாமன்ற உறுப்பினர்  சாந்தி சீனிவாசன்  உடனடியாக, இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் அளித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த 48வது வார்டு மாமன்ற உறுப்பினர்  கார்த்திக், முதற்கட்டமாக வெள்ளப்பெருக்கினால் வீடுகளை விட்டு வெளியெற முடியாமல், நாகலத்துமேடு மந்தவெளிப்பகுதியில் சிக்கி தவித்த அப்பகுதி சிறுவர்களை தனது தோளில் சுமந்தபடி, ஆர்பரித்துக்கொண்டு ஓடிய வெள்ள நீரினை கடந்து சென்று  மீட்டெடுத்து காப்பாற்றியுள்ளார்.



 

 

அதன் பின் வந்த தீயணைப்புத் துறையினர் மற்றவர்களை மீட்டெடுத்து அனைவரையும் நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர். இந்நிலையில் தற்போது மாமன்ற உறுப்பினர் ஒருவர் வெள்ளப்பாதிப்புகளில் சிக்கியவர்களை  மீட்டெடுத்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு வைரலாகி வருகிறது.



 

 


காஞ்சிபுரம் மழை அளவு

 

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், ஓலிமுகமது பேட்டை, கீழம்பி,தாமல், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை  வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரத்தில் 6 சென்டிமீட்டர் மழையும், வாலாஜாபாத்தில் 2.2 சென்டிமீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 1.9 சென்டிமீட்டர், குன்றத்தூரில் 3.6 சென்டிமீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 17 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது.