காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உபரி நீரானது வெளியேறி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள வேகவதி ஆற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடர் கனமழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 600கன அடி நீரானது ஆர்ப்பரித்து சென்றது.

 

வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

 

இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறத்திலுள்ள தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரங்களில் மழை வெள்ள நீரானது, சூழத்துவங்கி நிலையில் நேற்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில், ஒன்றான தாமல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் பல்வேறு  பகுதிகளில்  பெய்த மழை நீரும் சேர்ந்து வேகவதி ஆற்றில் சுமார் 2000 கன அடி நீரானது வரத்துவங்கி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 



இதன் காரணமாக தாயார்குளம்  ஆற்றங்கரையோரங்களிலுள்ள குடியிருப்புகளில், வெள்ள நீர் உள் புகுந்து அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியே முடியாமல் தவித்து வந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் தீயணைப்பு மற்றும் காவல்துறை மூலம் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு  அப்பகுதி பொது மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



 

 

ஆற்றில் 2000 கன அடி நீர்

 

மேலும் தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள இரண்டு சிரிய தரைப்பாலங்களில் ஒரு பகுதியினை வெள்ள நீர் செல்ல ஏதுவாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் உடைத்தனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக வேகவதி ஆற்றில் சுமார் 2000 கன அடி நீரானது ஆர்ப்பரித்துக்கொண்டு செல்கிறது.

 

தொடர்ந்து வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2000 கன அடி நீரானது செல்கின்ற காரணத்தால், அப்பகுதியில் பொது மக்கள் யாரும் வேடிக்கை பார்க்கவோ, அப்பகுதியை கடந்து செல்லவோ தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 

தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகின்ற காரணத்தாலும், பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகவும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு இந்த வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிக்கும் எனவும்,மழை பெய்யாமல் இருந்தால் ஓரிரு நாட்களில் வெள்ளப்பெருக்கு  குறைய வாய்ப்புள்ளதாக பொதுப் பணித்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மழை அளவு

 

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், ஓலிமுகமது பேட்டை, கீழம்பி,தாமல், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை  வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரத்தில் 6 சென்டிமீட்டர் மழையும், வாலாஜாபாத்தில் 2.2 சென்டிமீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 1.9 சென்டிமீட்டர், குன்றத்தூரில் 3.6 சென்டிமீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 17 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது.