செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ஆணையரகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர் சம்பவம் நடைபெற்ற ஆண்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த வேளையில் தாம்பரம் பகுதியில் இருந்து, கூடுவாஞ்சேரி, செல்லும் அரசு பஸ்சில் வடமாநில இளைஞர் ஒருவர் ஏறினார். அதன்பிறகு அவர் திடீரென்று பஸ்சில் இருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கியுள்ளார்.



 

அந்த இளைஞரை பார்த்தபோது காளீஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் ஏதோ தவறு செய்வதாக காளீஸ்வரி நினைத்தார். இதனால் அவர் இளைஞரிடம் விசாரிக்க சென்றார். காளீஸ்வரியை பார்த்த இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தன்னைக் கண்டவுடன் வட மாநில இளைஞர் ஓடிய துவங்கிய காரணத்தினால் சந்தேகம் அடைந்து, காளீஸ்வரி துரத்தி பிடிக்க முயற்சி செய்துள்ளார். காளீஸ்வரி தள்ளி விட்டு அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் ஓட முயற்சி செய்தாலும் மனம் தளராத காளீஸ்வரி அந்த இளைஞரை பிடித்து விசாரித்தே ஆக வேண்டும் என சில நூறு மீட்டர்கள் துரத்திக் கொண்டு சென்றார். 

 

 

சினிமா பாணியில்..

 

இதனை அடுத்து காளீஸ்வரி சம்பந்தப்பட்ட வட மாநில இளைஞரை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்து மடக்கி உள்ளார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று அந்த இளைஞரை பிடித்த காளீஸ்வரி, உடனடியாக அந்த இளைஞரிடம் இருந்து சோதனை செய்துள்ளார். அப்போது சம்பந்தப்பட்ட வடமாநில இளைஞர் இடம் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஐபோன் வைத்திருந்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையை பார்த்து ஓடியதும், விலை உயர்ந்த ஐபோன் வைத்திருந்ததையும் பார்த்த காளீஸ்வரி, இந்த ஐபோன் திருடப்பட்டு இருக்கலாம் என்பதால் இளைஞரை போலீஸ் நிலையத்துக்கு அவர் அழைத்து சென்றார். இதையடுத்து இளைஞரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (வயது 19) என்பதும், கூடுவாஞ்சேரி அரசு பஸ்சில் இருந்த பயணி ஒருவரின் ஐபோனை திருடிவிட்டு கீழே இறங்கியபோது காளீஸ்வரியிடம் சிக்கியது தெரியவந்தது.

 



 

திருடப்பட்ட ஐபோன்

 

சம்பந்தப்பட்ட வட மாநில இளைஞர் சோட்டாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பேருந்து பயணி ஒருவரிடம் இருந்து செல்போன் திருடியதையும் ஒப்புக்கொண்டார். சிறிது நேரத்தில் செல்போனை பறிகொடுத்த ஆண்டிமடத்தை சேர்ந்த மாயவேல் (30), காவல் நிலையம் வந்து புகார் அளித்தார். விவரங்களை சரிபார்த்து, அவரிடம் செல்போனை ஒப்படைத்தனர். பின்னர், சோட்டோவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் குற்றவாளியை விரட்டி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரிக்கு தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து காவல் ஆணையர் அகத்திற்கும் தகவல் தெரிவித்த காவல் அதிகாரிகள், பெண் காவலரை பாராட்டி வந்தனர்.

 

 

சைலேந்திரபாபு பாராட்டு

 

பெண் காவலர் சினிமா பாணியில் அச்சமின்றி திருடனை பிடித்த சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு காவல்துறை தலைவர்  சைலேந்திரபாபு, சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் வெகுமதி வழங்கி பாராட்டினார்.