பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்திற்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பில்  இன்று (29.01.2023) மாலை ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை பெருநகர மாநாகராட்சி காவல் ஆணையரகம் அனுமதி அளித்துள்ளது. 


பிபிசி ஆவணப்படம்:


கடந்த 2002 - ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கலவரத்திற்கும் அப்போதைய குஜராஜ் முதலமைச்சரான மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து அந்த ஆவணப்படம் பேசியிருந்தது.


இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வெளியான பிபிசி ஆவணப்படத்திற்கான லிங் அதிரடியாக நீக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி கேரளாவிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். இதை தொடர்ந்து பலரும் கைது செய்யப்பட்டனர்; பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்டது. 


இன்று ஆர்ப்பாட்டம்:


மத்திய அரசின் இந்தச் செயலை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் இன்று ((29.01.2023) மாலை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். இதற்கு பெருநகர காவல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. 


சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்ட அருகில் காவல் துறை குறிப்பிடும் இடத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் செய்யமால், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஆர்ப்பட்டத்தை மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.