கைத்தறி பட்டு சேலைக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்திற்கு மற்றொரு, பெயராக கோயில் நகரம் காஞ்சிபுரம் என அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கிய கோவில்களில் ஒன்றாக சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அத்திவரதர் உற்சவம் மூலம் உலக பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
தமிழ்நாட்டை சேர்ந்த பிற மாவட்ட பக்தர்கள் மட்டும் இன்றி வெளிமாநில பக்தர்களும் இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து செல்வது அதிகரித்து வருகிறது. ஒரே வருடத்தில், 180 நாட்களுக்கு மேல் பல உற்சவங்கள் நடைபெறும் கோவிலாக இந்த திருத்தலம் விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோயிலில் நடைபெறும் உற்சவத்தின் பொழுது, சமூக வலைதளத்தில், அவற்றை வீடியோ , புகைப்படம் எடுத்து பகிர்வது கூடாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகைப்படம் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி ஆணையர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இத்திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் youtube சேனல், துவங்கப்பட்டுள்ளது.அனைத்தும், திருக்கோயில் உற்சவங்கள் மற்றும் புகைப்படங்கள் இத்திருக்கோயில் வலைதள முகவரி hrce.tn.gov.in temple search TMo01864 வலைதளம் மற்றும் youtube வலைதளம் மூலம் காணலாம். திருக்கோயில் உற்சவங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளம் மற்றும் YouTube-ல் பொதுமக்கள் மற்றும் தனிநபர்கள் யாரும் வெளியிட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மீறி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் தொடர்பு கொண்டு ஏபிபி நாடு சார்பில் பேசினோம், " youtube சேனல்களில் வீடியோக்கள் பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மற்றும் youtube உள்ளிட்ட சேனல்கள் மூலம் பலர் வருமானம் பார்த்து வருகின்றனர். எனவே கோயில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் சார்பில் தனி சேனல் துவங்கப்பட்டுள்ளது. இனி இந்த சேனல் மூலம் அனைத்து நிகழ்ச்சிகள் உற்சவங்கள் ஆகியவை பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைதள பக்கங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .