தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொதுக் நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகஸ்ட் 19ஆம் தேதி மனு அனுப்பியுள்ளார்.
அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்டு, 19 கேள்விகளை மனுவில் முன்வைத்துள்ளார்.
அதன்படி, சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன, உருவாக்கியவர் யார், வேறு எந்த நாட்டிலோ பின்பற்றப்பட்டுள்ளதா, பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நீங்கள் உறுப்பினரா, தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியின் சார்பு செயலாளர் சி.ரமா பிரபா, ஆளுனரிடம் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி எழுப்பிய கேள்விகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராது என்றும், அதுதொடர்பாக தகவல்கள் ஆளுனரின் செயலகத்தில் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மற்றொரு வழக்கு
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தும் சுங்கச்சாவடிகளில் இரண்டு வார காலத்திற்கு வீடியோ கேமராகளை வைத்து பதிவு செய்ய சுங்கச்சாவடி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்திலிருந்து 50 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுகளை திரும்பப்பெறக் கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், ஃபாஸ்டாக் தொழில்நுட்ப முறை ஆகியவை சேதப்படுத்தியதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் குற்றம்சாட்டி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரியும், 800 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்க கோரியும் திருச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊழியர்கள் அமைதியான முறையில் போரட்டத்தை நடத்தலாம், வாகன போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது, சுங்கச்சாவடி பணிகள் பாதிக்காத வகையில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் இந்து கருணாகரன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் பணிகளில் இடையூறாக ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஊழியர்கள் தரப்பில் வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் ஆஜராகி, மனுதாரர் நிறுவனம் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்றும், அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தை நடத்தி வருவதாகவும், சுங்கச்சாவடி அறைகளை பூட்டி வைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ. செல்வேந்திரன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவின்படி சுங்கச்சாவடிக்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருவதாகவும், சுங்கச்சாவடி மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு வழங்குவதுடன், சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் அதை வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆகும் கூடுதல் செலவை சுங்கச்சாவடி நிறுவனம் திரும்ப செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரண்டு சுங்க சாவடிகளுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்கி சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் அதற்கான கட்டணத்தை சுங்கச்சாவடி நிறுவனம் செலுத்தினால், உரிய கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம் அமைதியாக போராட்டம் நடந்தும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்றும், அவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு சுங்கச்சாவடிகளிலும் தேவையான இடங்களில் சுங்கச்சாவடி நிறுவனம் தனது சொந்த செலவில் காவல்துறை உதவியுடன் வீடியோ கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும், அதில் பதிவாகும் காட்சிகளை காவல்துறை கண்காணித்து, விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், அதை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு வார காலத்திற்கு இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், அதன் பிறகு காவல்துறையும், சுங்கச்சாவடி நிறுவனமும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 27 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.