கடந்த சில தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஏறி பயணம் செய்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டு அவர்களின் உடமைகளை தூக்கி எறிந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று சென்னை பெரம்பூரில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற தடம் எண் 42 என்ற பேருந்து சென்ட்ரல் மோர் மார்க்கெட் பகுதியில் நின்றது. அப்போது நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 2 பேர் பேருந்தில் ஏறினர். அப்போது பேருந்து ஓட்டுனர் அப்துல் மன்னன் (60) என்பவர் அவர்களை பேருந்து உள்ளே வரும் படி கூறி உட்கார இருக்கை தந்தார். மேலும் அவர்கள் பாரிமுனை செல்ல வேண்டும் என்று கூறினர். அவர்களை பாரிமுனையில் இறக்கி விட்ட அப்துல் மன்னன் , நடத்துனர் மோகன் ஆகியோர் அவர்கள் எங்கே செல்ல வேண்டும் என்று விசாரித்தனர்.
அப்போது அவர்கள் பெரம்பூர் வீனஸ் செல்ல வேண்டும் என்று கூறி உள்ளனர். அப்போது அங்கிருந்த பேருந்து தடம் எண் 242க்கு அழைத்து சென்றனர். அப்போது அப்துல் மன்னன் , மோகன் ஆகியோருடன் 242 பேருந்தின் ஓட்டுனர் சதிஷ் பாபு , நடத்துனர் பூமணி ஆகிய 4 பேரும் சேர்ந்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவருக்கும் காலில் பால் அபிஷேகம் செய்து தோலில் மாலை அணிவித்து குங்குமம் வைத்து பேருந்தில் ஏற்றினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், சமீப காலமாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் குறித்து ஒரு தவறான கண்ணோட்டம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவதால் அதனை போக்கவும் அனைத்து பயணிகளும் சமமுடன் நடத்துவதற்காகவும் இது போன்று செய்ததாக கூறினர்.
குற்றச்செயல்களை தடுக்க போலீஸ் பூத்தை உடனடியாக திறந்து காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட மக்கள் கோரிக்கை
சென்னை கொளத்தூர் ராஜாஜி நகர், காமராஜர் தெரு, காவேரி தெரு மற்றும் அதனை சுற்றி பகுதிகளில் சமீப காலமாக தொடர்ந்து செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, கத்தியை காட்டி மிரட்டல் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் , இப்பகுதியில் உள்ள போலீஸ் பூத் சில மாதங்களாக பூட்டியே கிடப்பதாலும், போலீசார் ரோந்து பணியில் சரி வர ஈடுபடாததாலும் சமூக விரோதிகள் எவ்வித அச்சமின்றி குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் உடனடியாக காவல் துறையினர் போலீஸ் பூத்தை திறந்து அனைத்து நேரங்களிலும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும், தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே இனிமேல் நடைபெறும் குற்றங்களை முன்பாகவே தடுக்க முடியும் என கோரிக்கை வைத்தனர்.