சென்னை, அம்பத்தூரில் உள்ள பிரபல அடுக்குமாடிக் குடியிருப்பின் நீச்சல் குளத்தில் 8 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் பானு நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (34). பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இவர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்மணி (32). இத்தம்பதியின் மகள் தனன்யா (8), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கண்மணி தினசரி காலை தனது மகள் தனன்யாவை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம்.
அப்போது, தனன்யாவுடன் படிக்கும் சக மாணவி கனுஷ்யாவின் தாய் சிந்துஜாவும் (31) கண்மணியும் நண்பர்களாகி உள்ளனர். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று முன் தினம் (ஆக.06) மாலை 5 மணிக்கு கண்மணியை செல்போனில் தொடர்பு கொண்டு, அவரது மகளை கூட்டிக்கொண்டு தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வரும்படியும், தங்கள் குடியிருப்பில் நீச்சல் குளம், விளையாட்டுப் பூங்காக்கள் உள்ளிட்டவை உள்ளதால் குழந்தைகள் ஜாலியாக விளையாடலாம் என்றும் கூறி சிந்துஜா அழைத்துள்ளார்.
மேலும் படிக்க: Crime : வன்கொடுமை.. தலை துண்டிப்பு.. அரசுத் தேர்வுகளுக்கு படித்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இளைஞனின் பரபரப்பு வாக்குமூலம்
அதன்படி, கண்மணி தனது மகள் தனன்யாவை அழைத்துக்கொண்டு அம்பத்தூர் கருக்கு மெயின் ரோட்டில் உள்ள பிரபல அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் சிந்துஜா வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் சிந்துஜா, அவரது மகள் கனுஷ்யா, தனன்யா, மற்றொரு சிறுவன் ஆகியோர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், கண்மணி அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது தனன்யா எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கண்மணி, சிந்துஜா இருவரும் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் மேல் சிசிச்சைக்காக வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு தனன்யாவை அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு தனன்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்