கந்திலி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிணற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். 


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே செல்லரபட்டி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.


விசாரணையில், பிணமாக கிடந்த பெண், சீனிவாசன் என்பவரது 22 வயது மகளான  சந்தோஷ் பிரியா என்பதும், பட்டதாரியான இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் அரசு தேர்வுக்கு படித்து வந்ததும் தெரியவந்தது.


இவரை அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான மகேந்திரன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணை வைத்தும், விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலீசார் தேடுவதை அறிந்த மகேந்திரன் எலவம்பட்டி கிராம நிர்வாக அலுவலர்களிடம் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.


இதையடுத்து, மகேந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.  அதில் மகேந்திரன் கூறியதாவது, ஆன்லைனில் வரும் பொருட்களை வீடுகளுக்கு நேரில் சென்று டெலிவரி செய்யும் வேலை செய்துவந்தேன். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியாவை ஒருதலையாக காதலித்தேன். இந்த நிலையில் சந்தோஷ் பிரியா, தன் வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார்.


அவரது உள்ளாடைகளை எடுத்துச் சென்றபோது அவரது தாத்தா மற்றும் உறவினர்கள் பார்த்துவிட்டு என்னை கடுமையாக திட்டி ஊரைவிட்டு வெளியேறுமாறு கூறினார்கள். இதனால் நான் பெங்களூருவுக்கு சென்று அங்கு பணிபுரிந்து வந்தேன்.


பிறகு இங்கு வந்து துணிக்கடையில் வேலை பார்த்து வந்தேன். சந்தோஷ் பிரியாவை அடைய வேண்டுமென எனக்குள் ஆசை ஏற்பட்டது. சம்பவத்தன்று நான் மோட்டார் சைக்கிளில் செல்லரபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது சந்தோஷ் பிரியாவை வண்டியில் உட்காருமாறு கூறினேன்.


அதற்கு அவள் மறுத்து, என்னை கன்னத்தில் அறைந்தாள். நான் அவளது வாய் மற்றும் மூக்கை மூடியதால் மயக்கம் அடைந்தாள். உடனடியாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை இறுக்கி காலால் மிதித்து கொலை செய்து அருகிலிருந்த கிணற்றில் வீசிவிட்டு சென்று விட்டேன். ஒரு மாதம் ஆகியும் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. பிறகு அவரது உடல் கிணற்றி இருந்து எடுக்கப்பட்டதால் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதால் நான் சரணடைந்து விட்டேன் கூறி உள்ளார். கைது செய்யப்பட்ட மகேந்திரன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.