Chennai Outer Ring Road: சென்னை அவுட்டர் ரிங் ரோடிலும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனியார் சுங்கக் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை அவுட்டர் ரிங் ரோடிற்கும் சுங்கக் கட்டணம்:

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, புறநகரில் ரிங் ரோட் அமைக்கப்பட்டது. வண்டலூரில் தொடங்கி மீஞ்சூர் வரையிலான இந்த சுமார் 62 கிலோ மீட்டர் சாலையானது, பிரதான தேசிய நெடுஞ்சாலைகளான NH4 (நஸ்ரத்பேட்டை), NH205 நெமிலிச்சேரி (நஸ்ரத்பேட்டை) மற்றும் NH5 (நல்லூர்) ஆகியவற்றையும் இணைக்கிறது. இந்நிலையில் தான், இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு வழிச்சாலையில் அரசு மற்றும் தனியார் கூட்டு நிர்வாகத்தின் கீழ் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு அரசு டெண்டர்களையும் வெளியிட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு தனியார் வசம்:

மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை நிர்வாகமானது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் Toll Operate Transfer (TOT) எனும் முன்மாதிரியை ஏற்று, சாலைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. தெற்கில் வண்டலூர் தொடங்கி வடக்கே மீஞ்சூர் வரையிலான இந்த சாலையை, மக்கள் வரிப்பணமான 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு கட்டமைத்தது.

இந்நிலையில் மாநில அரசின் சொத்தை பணமாக்குதல் திட்டட்தின் கீழ், அந்த சாலை 2000 கோடி ரூபாய் மதிப்பிற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, TOT திட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம் மொத்த தொகையையும் முன்பணமாக கொடுத்துவிட்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவுட்டர் ரிங் ரோடில் பயணிக்கும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்.

கட்டணம் வசூலிப்பது ஏன்?

எதிர்கால உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான மூலதனத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையாகவே, இந்த சுங்கக் கட்டண திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக சென்னை அவுட்டர் ரிங் ரோடில் ஏற்கனவே வரதராஜபுரம், கொலப்பன்சேரி, பலவேடு மற்றும் சின்னமுலைவாயல் ஆகிய நான்கு இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. புதிய டெண்டரின்படி, 2050ம் ஆண்டு வரை இனி அவை தனியாரின் கீழ் செயல்பட உள்ளன. 

நோக்கமும்.. விமர்சனங்களும்..

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து கட்டப்பட்ட சாலையை பயன்படுத்த, நீண்ட காலத்திற்கு சுங்க வரி வசூலிப்பது எப்படி நியாயமாகும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே வரி செலுத்துவோரால் செலுத்தப்பட்ட பணத்தை கொண்டு கட்டப்பட்ட சாலைக்கு, மீண்டும் ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசுக்கு, மாநில நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் மக்களின் மீது வரிச்சுமையை தான் ஏற்படுத்தும் என்பது தெரியவில்லையா? என லாரி உரிமையாளர்கள் கேள்வி எழ்ய்ப்புகின்றனர்.

அவுட்டர் ரிங் ரோடில் போக்குவரத்து

சென்னை அவுட்டர் ரிங் ரோடில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையானது காலப்போக்கில் மேலும் மேலும் உயரும் என டெண்டர் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தினசரி சுமார் 20 ஆயிரம் முதல் 31 ஆயிரம் வாகனங்கள், பல்வேறு சுங்கச்சாவடிகள் வழியாக அந்த சாலையில் பயணித்து வருகின்றன. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.5 சதவிகிதம் அளவிற்கு உயரும் என கூறப்படுகிறது. 

2050ம் ஆண்டில் சில பகுதிகளில் ஒருநாளைக்கு சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கக் கூடும். உதாரணமாக தற்போது தினமும் சுமார் 31 ஆயிரம் வாகனங்களை கையாளும் வரதராஜபுரம் சுங்கச்சாவடி, அடுத்த 25 ஆண்டுகளில் தினசரி சுமார் 70 ஆயிரம் வாகனங்களை கையாள வாய்ப்புள்ளது. தற்போது தினசரி 26 ஆயிரம் வாகனங்களை கையாளும் பாலவேடு பிளாசா, அடுத்த 25 ஆண்டுகளில் தினசரி சுமார் 55 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை கையாளலாம்.