கொளத்தூரில் பரபரப்பு ; நண்பரின் காதலியை வரவழைத்து வடமாநில கும்பல் அட்டூழியம் !!

Continues below advertisement


சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் 12 - வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 55 ) இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பாரிமுனையில் உள்ள தனியார் கம்பெனியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஐஸ்வர்யா என்ற பெண் உள்ளனர். மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஐஸ்வர்யா என்பவர் ராயப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான டீ ஷாப் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். 


கடந்த மாதம் பத்தாம் தேதி மதியம் 12 மணிக்கு ராஜசேகர் மற்றும் அவரது மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். ஐஸ்வர்யா அன்று ஒரு இன்டர்வியூக்காக வெளியே சென்று விட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். 


சிசிடிவி காட்சியில் சிக்கிய பெண்


ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து பார்த்த போது நகை மற்றும் பணம் உள்ளிட்டவை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து கொளத்தூர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். இதனையடுத்து கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் வீட்டிற்கு வந்து தன்னிடம் உள்ள சாவியை வைத்து வீட்டைத் திறந்து நகை மற்றும் பணத்தை திருடி செல்வது தெரிய வந்தது. 


வீட்டின் கதவு எதுவும் உடைக்காமல் அவரிடம் இருந்த சாவிகளை வைத்து வீட்டைத் திறந்து திருடி சென்றது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வீட்டில் இருந்த ராஜசேகர் மற்றும் அவரது மனைவி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் சி.சி.டி.வி.யில் வந்த அந்த பெண் வட மாநில பெண் போன்று இருந்தார். இதனால் அந்த குடும்பத்திற்கு வடமாநில நபர்களோடு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  


சந்தேகத்தை கிளப்பிய டீ கடையில் வேலை செய்யும் நபர்


ராஜசேகரனின் வீட்டு சாவி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளது. இதனால் ராஜசேகர் டூப்ளி கேட் சாவியை வீட்டிற்கு பயன்படுத்தி வந்துள்ளார். இந்த தகவலை அவர் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் ராஜசேகரின் மகள் ஐஸ்வர்யா என்பவர் ராயப்பேட்டையில் நடத்தி வரும் டீ ஷாப்பில் வட மாநில நபர் ஒருவர் வேலை செய்த விஷயம் போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும் அவர் கொளத்தூரில் உள்ள ராஜசேகர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதும் தெரிய வந்தது. 


இதனால் போலீசார் அந்த வட மாநில நபர் குறித்து விசாரணை செய்ததில் அவர் மும்பை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் ( வயது 30 ) என்பதும் கடந்த ஜூலை மாதம் ஐஸ்வர்யா டீ ஷாப் ஓபன் செய்யும் போது அவர் வேலைக்கு சேர்ந்ததும் தெரிய வந்தது. திருட்டு சம்பவம் நடந்த அந்த நேரத்தில் அவர் தனது அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி மும்பைக்கு சென்றிருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது.  


இதனையடுத்து போலீசார் அவரது செல்போன் சிக்னல்களை ரகசியமாக கண்காணித்தனர். மேலும் கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஆகாஷை பிடிக்க மும்பைக்கு கிளம்பிச் சென்றனர். ஆனால் அவர் சென்னைக்கு கிளம்பி வந்து விட்டது போலீசாருக்கு தெரிய வந்தது. 


இந்நிலையில் மும்பைக்குச் சென்ற கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வைத்து ஆகாஷை பிடித்தனர். மேலும் அவருடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில பெண் மற்றும் ஆகாஷின் உடன் பிறந்த சகோதரர் ஆதேஷ் ஆகியோரையும் பிடித்து விசாரணை செய்தனர். 


வீட்டு சாவியை திருட்டிய வட மாநில நபர்


விசாரணையில் , ஐஸ்வர்யா நடத்தி வரும் டீ ஷாப்பில் வேலை செய்யும் ஆகாஷ் ஐஸ்வர்யா குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மாலை நேரத்தில் தனது மகளுக்கு உறுதுணையாக ராஜசேகர் மற்றும் அவரது மனைவி வந்து உதவியாக இருந்துள்ளனர். அப்பொழுது ராஜசேகரின் வீட்டு சாவியை திருடி கொண்ட ஆகாஷ் அதை மறைத்து வைத்துக் கொண்டார்.


சில நாட்கள் கழித்து மும்பையில் வசிக்கும் தனது தம்பி ஆதேஷ் மற்றும் நண்பரின் காதலி சபினா பர்வாமா ஆகியோரை சென்னைக்கு வர வைத்துள்ளார். அதன் பிறகு வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு தனது தம்பி மற்றும் சபீனா பர்வாமா ஆகிய இருவரையும் ராஜசேகர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.


அப்பொழுது அந்த பெண் வீடியோ காலில் ஆகாஷ் உடன் பேசும் போது ஆகாஷ் வீட்டைத் திறந்து எந்த இடத்தில் நகைகள் உள்ளது என்பதை துல்லியமாக கூறியுள்ளார். அதன்படி அந்த பெண்ணும் வீட்டில் இருந்த மூன்று சவரன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை பூட்டி விட்டு அன்று இருவரும் மும்பைக்கு சென்று விட்டனர். 


அதன் பிறகு ஆகாஷ் அவர்களை சந்தித்து நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட  ஆதேஷ் மற்றும் சபீனா பர்வாமா ஆகிய இருவரும் மும்பையில் இருந்து கிளம்பி சென்னையில் உள்ள ஆகாஷை பார்க்க வந்துள்ளனர்.


அவர்களுக்கு வேண்டிய பணம் தராததால் அதனை கேட்டு பெற வந்த போது ஏற்கனவே ஆகாஷை தேடி மும்பை சென்ற போலீசார் சென்ட்ரலில் வைத்து தனது தம்பியை அழைத்துச் செல்ல வந்த ஆகாஷ் ( வயது 30 ) மற்றும் ஆதேஷ் ( வயது 27 ) திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சபீனா பர்வாமா ( வயது 32 ) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் ஆகாஷை அழைத்துக் கொண்டு ராயப்பேட்டையில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று இரண்டரை சவரன் நகைகளையும் மீட்டனர்.  


இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.