செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக்கு முந்தைய விநாயகியின் கல் சிற்பம் ஒன்று இந்திய தொல்லியல் துறை  குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் வழிபாடு பரவலாக உள்ள நிலையில், தும்பிக்கையுடன் கூடிய விநாயகி என்னும் பெண் தேவியின் சிலை இதுவரை குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளது.



 

இந்த விநாயகியின் சிலை கிரானைட் கல்லால் செய்யப்பட்ட 3 அடி உயரம் கொண்ட சிற்பமாகும். இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த எழில் முருகன் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டில் தொல்லியல் ஆய்வு இந்தியத் தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வாளர்கள் முனைவர் இரா.ரமேஷ், மோ.பிரசன்னா மற்றும் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் ப.த.நாகராஜன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட பொழுது . இரண்டு கல்வெட்டுடன் கூடிய இரு சிற்பங்கள் கிடைத்தன அவை பலகைக்கல்லில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் இவ்வூரின் மேட்டுத்தெருவின் தெற்கேயுள்ள நீரோடையின் கரையோரம் காணப்பட்ட முதல் சிற்பமானது விநாயகி என அதன் சிற்ப அமைப்பின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டது.



 

இரண்டாவது சிற்பமானது மேட்டுத்தெருவின் குளக்கரையில் முதல் சிற்பம் போன்று பலகைக்கல்லில் கல்வெட்டுடன் ஓர் சிற்பம் காணப்படுகிறது. அது உள்ளூர் மக்களால் துர்க்கை அம்மன் என அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் சிற்ப அமைதி ஆண் சிற்பக்கூறுகளை கொண்டு காணப்படுகிறது. மேலும் ஓராண்டு பிறகு மீள்ளாய்வு செய்வதற்க்கு ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பொழுது மேலும் ஓர் சிற்பம் விநாயகர் சிலை அருகே கண்டெடுக்கப்பட்டது. 



 

மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்சொல்லப்பட்ட இருசிற்பங்களின் சமகாலத்தை சார்ந்த ஓர்சிற்பம் அதே எழுத்தமைதியுடன் காணப்பட்டது. மேலும் அச்சிற்பத்தின் வடிவமைப்பில் லகுலீசர் என உறுதிசெய்யப்பட்டது. இம்மூன்று சிற்பங்களும் கல்வெட்டின்  எழுத்தமைதியின் அடிப்படையிலும் சிற்ப அமைதி அடிப்படையிலும் இவை கி.பி 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டை சார்ந்தது எனலாம். இவை சுமார் 1500 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் காலத்தை சார்ந்தது. "செயம் பட்ட முத்திர வரிகன் மடவதி" என்ற கல்வெட்டு வாசகம் மூன்று சிற்பங்களிலும் காணப்படுகின்றன. அதாவது இவ்வூரைச் சேர்ந்த முத்திர வரிகன் மடவதி என்பவர் தான் பெற்ற வெற்றியின் நினைவாக இச்சிலைகளை செய்து கொடுத்துள்ளார் என அறிய முடிகிறது. இச்சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் தொடர்பாக மேலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.