கடல் கடந்து வந்து மாமல்லபுரம் கலையை ரசித்து முழு சிற்பக்கலைஞராக மாறிய பிரான்ஸ் நாட்டு பெண்


அற்புத நகரம் மாமல்லபுரம்



ஏழு கடற்கரை கோவில்கள் இருந்ததாக கூறப்படும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பங்கள், பல்லவர் கால கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. மாமல்லபுரம் சிற்ப கோவில்களை கண்டு ரசிக்க இந்தியா மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். அந்தவகையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், சிற்பக்கலை மீது உள்ள ஆர்வத்தால், மாமல்லபுரத்திலேயே சிற்பி ஒருவரை திருமணம் செய்து கொண்டு 20 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் தம்பதிகளை குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.




சுற்றுலா பயணியாக வந்த கேப்ரியெல்


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது49). இவர் மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரியில் கல்சிற்ப பிரிவில் பயின்று பட்டம் பெற்று சிற்பக்கலைஞரானவார். கடந்த 2001-ம் ஆண்டு மாமல்லபுரம் சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண் கேப்ரியேல் (47) என்பவர் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் சிற்பங்களை பார்த்து வியந்து, இந்திய சிற்பக்கலையை கற்றுக்கொள்ள விரும்பி சிற்பி சீனிவாசனின் சிற்ப கூடத்தில் சிற்பக்கலை பயிற்சி பெற்றார்.


காதலும் சிற்பக்கலையும்


 பிறகு சிற்பக்கலையின் மீது உள்ள ஈர்ப்பு, கரை ரசனை,ஆர்வம் காரணமாக மாமல்லபுரம் சிற்பி சீனிவாசனை கடந்த 2004-ஆம் ஆண்டில் அக்டோபர் 24-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 



திருமணம் முடிந்த கையோடு சீனிவாசனையும் தன்னுடன் பிரான்ஸ் அழைத்து சென்றுள்ளார் கேப்ரியெல். அங்கும் தனது சிற்பக்கலை தொழிலை தொடர்ந்திருக்கிறார் சீனிவாசன். அவருக்கு கேப்ரியேல் ஆர்டர்கள் பிடித்து கொடுத்து வந்ததால், சிற்பம் செதுக்கும் பணியை அங்கும் தொடர்ந்தார். பிறகு அவருடன் கேப்ரியேலும், முழு நேரம் சிற்பம் வடிவமைக்கும் பணியில், மெல்ல, மெல்ல ஒரு கை தேர்ந்த முழு நேர சிற்பக்கலைஞராக மாறி உளி, சுத்தியலால் அழகுற சிற்பம் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 


வருடம் வருடம் மாமல்லபுரம்


ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிரான்சிலிருந்து மாமல்லபுரம் வரும் சீனிவாசன்- கேப்ரியேல் தம்பதியினர் இங்கு இரண்டு மாதங்களை வீணடிக்காமல் இங்கும் சிற்பம் செதுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக தனது கணவர் சீனிவாசனிடம் சிற்பம் செதுக்க கற்றுக்கொண்ட கேப்ரியேல் ஒரு திறமை வாய்ந்த பெண் சிற்பியாக மாறி, திராவிட பாணி சிற்பங்களை அருமையாக வடிவமைக்கிறார்.


குறிப்பாக வினாயகர், முருகர், பிரம்மா, விஷ்ணு, வள்ளி, தெய்வானை உள்ளிட்ட கடவுள் சிலைகளையும், மாடர்ன் ஆர்ட் சிற்பங்களையும் அழகுற வடிவமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.




தன் கையால் வடிவமைக்கப்பட்ட சிற்பம்


மேலும் அவர் வடித்துள்ள 30 கற்சிற்பங்களை கொண்டு ஒரு கதை விளக்கத்துடன், புத்தகமாக வெளியிட்டுள்ளார். தற்போது மாமல்லபுரம் வந்துள்ள சிற்பக்கலைஞர் கேப்ரியேல் இங்கு நேரத்தை வீணாக்காமல், தரையில் அமர்ந்;து உளி, சுத்தியல் கொண்டு அழகுற சிற்பம் வடிவமைக்கிறார். அவருக்கு சிற்பங்களிள் நுணுக்கங்களை அவ்வப்போது சீனிவாசனும் அருகில் இருந்து சொல்லி கொடுக்கிறார்.



தற்போது சிற்ப கலைஞர் கேப்ரியேல், பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரத்திற்கு அருகில் உள்ள ரேன் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த சமூக சேவகியும், அந்நாட்டு சீர்திருத்தவாதியுமான பெண் மதகுரு தெரேசா பான்து என்பரின் உருவ சிலையை அழகுற வடிவமைத்து, அவரை நேரில் காண்பது போன்று தத்ரூபமாக கடப்பா கல்லில் வடிவமைத்து அசத்தியுள்ளார்.