காஞ்சிபுரம் மாநகராட்சி

 

சுமார் 10 ஆண்டுகள் கழித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் நகர் மன்ற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது.  காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடந்த முதல் தேர்தல் என்பதால் மேயர் பதவியை கைப்பற்ற பல்வேறு கட்சிகளும் தீவிரம் காட்டின. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி பதவி ஒதுக்கப்பட்டது. எனவே மாநகராட்சி பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் திமுக 22, அதிமுக 9, பாஜக 1, பாமக 2, மற்றவர்கள் 6 என வெற்றி பெற்றனர். 

 

 

பெண் மேயர்

 

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருமான்மை கிடைத்த நிலையில் பலரும் மேயர் பதவியை பிடிப்பதற்காக போட்டி போட்டனர். இந்த நிலையில் நீண்ட காலமாக கட்சி பணியாற்றி வந்த, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்த யுவராஜ் , மனைவி மகாலட்சுமி யுவராஜிற்கு வாய்ப்பு வழங்கி கட்சி தலைமை உத்தரவிட்டது. இவர் 9 - வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றவர். இதனைத் தொடர்ந்து மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.



 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிக அளவு பெண் உறுப்பினர்களை பெற்றுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பதவியில் இருக்கும் பெண்களின் உறவினர்கள் கனவுகள் உள்ளிட்டவர்கள் அவருடைய பணிகள் தலையிடக்கூடாது என தமிழக முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில், உறவினர்களின் தலையீடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

 

முகநூல் பதிவுகள்

 

இந்நிலையில் மேயராக பதவியேற்ற பின்னர் மகாலட்சுமி யுவராஜின் செயல்பாடுகள் வேகமெடுத்தன. ஆனால் சர்ச்சைகளும் கூடவே சேர்ந்து கொண்டன. அதாவது, மாநகராட்சி பணிகளில் மேயரின் கணவர் யுவராஜின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநகராட்சி வார்டுகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக யார் புகார் கொடுக்க வந்தாலும் மேயர் உடன் அவரது கணவரும் கூடவே இருப்பதாகவும், மனுக்களை அவரே நேரடியாக பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி சர்ச்சையாகின.

 


இந்நிலையில் காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதம் ஒரு முகநூல் பதிவு வைரலாக பரவி வருகிறது. காஞ்சிபுரம் முன்னாள் கவுன்சிலர் கு.ப.கண்ணன் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், " காஞ்சிபுரத்தில் மொத்தம் 51 வட்டங்கள். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 1 வட்டத்தில் தேர்தல் நடைபெறவில்லை. 26 வட்டங்கள் பெண்களுக்கும் மற்றும் மீதமுள்ள 24 வட்டங்கள் பொதுவாகவும் மற்றும் மேயர் பதவி பெண்களுக்கும் ஒதுக்கீது செய்யப்பட்டன. ஆனால், தற்போது காஞ்சிபுரத்தில் 76 நகரமன்ற உறுப்பினர்களும், 2 மேயர்களும் உள்ளனர். சிந்தித்து பார்த்தால் கணக்கு புரியும்!!! " என பதிவு செய்துள்ளார். மறைமுகமாக பெண் கவுன்சிலரின் உறவினர்கள் மற்றும் கணவர்கள் அவர்களின் வேலையில் தலையிடுவதாக இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி, சமூகவலைதளத்தில் இந்த பதிவு வைரலாக பரவியது.



 

இதன் தொடர்ச்சியாக தனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு மேயரின் கணவரும், அவரது ஆதரவாளர்களும் தான் காரணம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டு இருந்தாலும் அதன், ஸ்கிரீன் ஷாட்டுகள் தற்போது காஞ்சிபுரம் அரசியல் களத்தில் ஒரு வலம் வந்து கொண்டுள்ளது.