சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொம்மியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகள் லாவண்யா என்கிற ஜெகதீஸ்வரிக்கும், திருப்பத்தூர் மாவட்டம் சாத்தனவளசு என்ற பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் வசித்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
வெங்கடேசனுக்கு வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் துறை முதல்வராக பணி கிடைத்தது. இதையடுத்து பெங்களூரில் இருந்து வண்டலூர் வந்து அந்த தனியாா் பொறியியல் கல்லூரியில் வெங்கடேஷ் பணியில் சோ்ந்தாா். அதோடு மேலக் கோட்டையூரில் உள்ள காவலர் குடியிருப்பில், வெங்கடேஷ், மனைவியுடன் வசித்து வந்துள்ளாா்..
இந்நிலையில் லாவண்யா திடீரென வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தாழம்பூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து லாவண்யாவின் தாயார் உஷாராணி தாழம்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், வெங்கடேசன் கடந்த 2019-ஆம் வருடம் ஜீலை மாதம் சென்னை வண்டலூரில் உள்ள கிரஸண்ட் பொறியியல் கல்லூரியில் பணியில் சோ்ந்தாா்.
மேலக் கோட்டையூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். எனது மகளை அழைத்து சென்று குடும்பம் நடத்தாமல் எங்களிடமே விட்டுட்டு சென்றுவிட்டார். நான் பலமுறை பேசியும் எனது மகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு இங்கு உன் மகள் வந்தால் உன் மகளை, கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
நான் அச்சத்தின் காரணமாக என் மகளை பெங்களூரில் என் வீட்டிலேயே வைத்துக் கொண்டேன். பின்பு மீண்டும் இனி இதுபோல் தவறுகள் நடக்காது என சமாதானம் பேசிய வெங்கடேஷ் என் மகளை அழைத்து சென்றார். லாவண்யாவை அழைத்து சென்ற கொஞ்ச நாளில், என் மகளின் மாமனார், என் மகளிடம் மருமகள் என்று கூட பார்க்காமல் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து என் மகள் என்னிடமும், தனது கணவரிடமும் கூறி கதறி அழுது எனக்கு மிகவும் அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது என கூறினார்.
இது சம்பந்தமாக புகார் கொடுக்க சென்றபோது மருமகன் வெங்கடேஷ் , அவரது அப்பா செல்வம் , மாமியார் ஆகிய மூவரும் சேர்ந்து கொண்டு என் மகளை தகாத வார்த்தைகளால் பேசி இனி உன்னை வாழவே விடமாட்டேன் என மிரட்டினார்கள்.
அதனால் மீண்டும் கடந்த 6 மாதமாக எனது மகள் 2 குழந்தைகளும் எங்கள் வீட்டிலேதான் இருந்தார்கள். இந்நிலையில் கடந்த 2022 ஏப்ரல் மாதம் மீண்டும் சமாதானம் பேசி அழைத்துச் சென்று வசித்து வந்தார். இதற்கிடையில் எனது மகள் லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெங்கடேஷ் நேற்றிரவு எனக்கு தகவல் தெரிவித்ததாகவும், என் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையில்லை என்பதால் எனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து சடலத்தை செங்கல்பட்டு பழவேலி மின் மயானத்தில் தகனம் செய்தனர்.