திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் வயது (29), கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கேபிள் டி.வி. இணைப்புக்கான பணத்தை வசூல் செய்வதற்காக திருவண்ணாமலை தாலுகா கொளக்கரவாடி கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம், சிலம்பரசன் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெற்றுள்ளார். மேலும் எனக்கு உயர் அதிகாரிகளை தெரியும், அவர்கள் மூலம் பல நபர்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்து உள்ளேன். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். பணம் கொடுத்தால் ரெயில்வே துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வங்கி, ஆர்.டி.ஓ.அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய அர்ஜூனன் அவரது மகன் மற்றும் மகளின் பிள்ளைகளுக்கு என மொத்தம் 6 பேருக்கு அரசு வேலைக்காக மொத்தம் ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்தை சிலம்பரசனிடம் கொடுத்து உள்ளார்.
அதேபோல் அந்த கிராமத்தில் மொத்தம் 27 நபர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக்குறி 61 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. மேலும் பல காரணங்கள் கூறி காலம் தாழ்த்தி வந்ததால் சிலம்பரசனிடம் பணம் கொடுத்தவர்கள் அவரின் வீட்டிற்கு சென்று அரசு வேலை வேண்டாம் எங்களுடைய பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று கேட்டு உள்ளனர். அப்போது சிலம்பரசன் பணத்தை தர முடியாது பணத்தை கேட்டு வந்தால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும், மேலும் அவரது மனைவி சத்யா வயது (23) மற்றும் தாய் குப்பு வயது (56) ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி திட்டி யாரும் பணத்தை கேட்டு வரக் கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 13 ஆம் தேதி மனு அளித்தனர்.
இந்நிலையில் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தியதில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சிலம்பரசன் அவரது மனைவி, தாய் ஆகியோர் 27 நபர்களிடம் 61லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சிலம்பரசனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலம்பரசனின் மனைவி மற்றும் தாயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.