தமிழ்நாட்டில் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோவிந்தவாடி, கால்வாய், துாசி மாமண்டூர் கால்வாய், கம்ப கால்வாய் ஆகியவற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது , ஏரிகள் நிரம்பி வருகின்றன.



 

தடுப்பணைகள்

 

பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், பழையசீவரத்தில், 42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றில் உள்ள ஈசூர்- வள்ளிபுரம் மற்றும் வாயலுார் ஆகிய தடுப்பணைகளும் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்யாற்றில் உள்ள வெங்கச்சேரி தடுப்பணையும் நிரம்பியுள்ளது. பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், கம்ப கால்வாய் மூலம், 82 ஏரிகள் நிரப்ப முடியும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். பாலாற்றில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் தற்போது உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். நேற்றைய கணக்கெடுப்பின்படி, பாலாற்றில் 5000 கன அடி நீர் செல்கிறது.



 

கடலுார் - வாயலுார் முகத்துவார படுகை தடுப்பணை பகுதியில், 5 அடி ஆழம் நீர் நிரம்பி, உபரி நீர் 7 செ.மீ., உயரத்தில், வினாடிக்கு, 1,360 கனஅடி நீர் வீதம், நேற்று வெளியேறியது. இப்பகுதிக்கு, வடமேற்கில், ஈசூர்-வல்லிபுரம் தடுப்பணை பகுதியிலும், நீர் நிரம்பி, முகத்துவாரம் நோக்கி பெருக்கெடுக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அணை பகுதியில் வெளியேற்றப்பட்ட நீர், இப்பகுதியை அடைந்தால், உபரி நீர், 1 அடி உயரத்தில், வினாடிக்கு, 5,000 கனஅடி வெளியேறும் என, பொதுப்பணி துறையினர் தெரிவித்தனர்.



 

ஏரிகள்

 

தமிழகத்தில் அதிகளவு மழை பெய்யக்கூடிய தரக்கூடிய வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 78 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 133 ஏரிகள் 70% முதல் 100% கொள்ளளவையும்  125 ஏரிகள் 50% முதல் 75% கொள்ளவையும், 183 ஏரிகள் 25% முதக் 50% கொள்ளளவையும், 350 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான கொள்ளளவிலும் ]நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



 

காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரி முழுவதுமாக நிரம்பி கலங்கள் வழியாக நீரை வெளியேற்றி வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கம்பம் கால்வாய் மூலம் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர் ஏற்கனவே தாமல் பெரிய ஏரி நிரம்பிய நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் பெரிய ஏரியான  கோவிந்தவாடி அகரம் பெரிய ஏரி மற்றும் சித்தேரி ஆகிய ஏரிகள்  கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.