கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க பயணம்  சென்று திரும்பிய நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தான் சிகாகோ சென்றதன் நோக்கம் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த நிலையில் அடுத்த நாளே கொரோனாவிற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறி , மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்ட கமல்ஹாசனுக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.  மேலும்  மக்களுக்கும் தொற்று அகலவில்லை. எச்சரிக்கையாக இருங்கள் என தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்


இதனையறிந்த ரசிகர்களும் , மக்கள் நீதி மையம் கட்சியினரும் அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் வீடு திரும்பியதாக கூறி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதில் கமல்ஹாசனுக்கு அவரது  குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.




ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சையின்  மூலம் அவருக்கு டைட்டேனியம் கம்பி பொறுத்தப்பட்டது. அதன் பிறகு சில கால இடைவெளியில் எலும்புகள் இணைந்த பிறகு கம்பியை அகற்றுவதற்காக 2019 ஆம் ஆண்டு அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டு அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து வீடு திரும்பிய கமல்ஹாசனுக்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் கம்பீரமாக நிற்கும் அந்த புகைப்படம் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால் தற்போது கொரோனா சிகிச்சையில் இருக்கும் கமல்ஹாசன் , வீடு திரும்பியதாக கூறி மேலே நீங்கள் காணும் புகைப்படம் வைரலாகிக்கொண்டிருக்கிறது. 


இது குறித்து மக்கள் நீதி மையம் செய்தி தொடர்பாளர் , முரளி அப்பாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் "கமல்ஹாசன் இன்னும் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை. வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோவில் காலில் அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பியப்போது வெளியானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தலைவர் நலமுடன் இருக்கிறார் விரைவில் வீடு திரும்புவார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி." என தெரிவித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் லேசான கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதால் , விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கோவை பகுதியில் நடைப்பெற்று வருகிறது. கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவரின் அலைச்சலை தவிர்க்க , மீதி படப்பிடிப்பை சென்னைக்கே மாற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.