அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மொத்தம் 10 ஆயிரத்து 371 காலியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் தேர்வு எப்போது என்ற தகவல் அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பணிகளுக்கான ஆட்களை டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. இதற்கான தேர்வையும் டிஎன்பிஎஸ்சியே நடத்துகிறது. அதேபோல அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்கிறது.
அந்த வகையில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10, 371 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முழுமையான கால அட்டவணைத் திட்டம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்படும் எனவும் டிசம்பரில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2,407 பணியிடங்களுக்குத் தேர்வு நடந்து முடிந்த நிலையில், அதற்கான முடிவும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பப் பதிவு முடிவடைந்த நிலையில், தேர்வு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் விரிவுரையாளர் பணிக்கு 155 காலி இடங்கள் உள்ளன. தேர்விற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்வு வரும் அக்டோபர் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1,874 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவர்களுக்கான தேர்வு அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
3,987 இடைநிலை ஆசிரியர்கள் தேர்விற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்வானது டிசம்பர் மாதம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரி காலிப் பணியிடங்களை நிரப்பவும் முடிவு
அரசுப் பள்ளிகளைப் போல, அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,358 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பும் அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 97 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மொத்தம் 10 ஆயிரத்து 371 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்