ட்விட்டரில் மாட்டுக்கறி உணவை போட்டோ எடுத்து பதிவிட்ட ட்விட்டர் வாசியின் பதிவிற்கு சென்னை காவல் துறை பதிவிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எந்த உணவு உண்ண்வேண்டும் என்பது அவரவரின் விருப்பம் என சமூக வலைதளங்களில் இணையதளவாசிகள் சென்னை காவல்துறையின் இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரபல சமூகவலைதளமான ட்விட்டரில் இணையதள வாசி ஒருவர், தான் சாப்பிட இருந்த மாட்டுக்கறி உணவை புகைப்படம் எடுத்து, ‘மாட்டுக்கறி’ என்று பெயரில் பதிவிட்டு இருந்தார்.
இந்தப்பதிவிற்கு சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து, ‘இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது என்றும் தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் எதிர் பதில் பதிவு பதிவிடப்பட்டது. இதற்கு பலரும் கடுமையான எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் உணவு என்பது தனிப்பட்ட உரிமை, யாரும் தலையிட முடியாது என்ற தொனியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மாமிச அரசியல்
தமிழகத்தில் ஆளும் திமுகவிற்கும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு இடையே நடக்கும் அரசியல் மோதலில் மாமிச அரசியல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நிலைப்பாட்டை தமிழகம் மட்டுமல்லாது பல அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தனிமனித விருப்பம் சார்ந்த விஷயங்களில் யாரும் தலையிட முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதனை வெளிப்படுத்தும் விதமாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் பலரும் மாட்டுக்கறி உணவு சார்ந்த விஷயங்கள் பற்றியும், அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்தான் இந்த ட்விட்டர் வாசியும் தான் சாப்பிட இருந்த மாட்டுக்கறி புகைப்படத்தை பதிவிட்டார். இதற்குதான் தற்போது சென்னை காவல்துறை பதிலளித்து உள்ளது.
பிரியாணி திருவிழாவிற்கு தடை
முன்னதாக சமூக ஒருமைப்பாட்டுக்காக ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி கடைகளையும் ஒன்று சேர்த்து பிரியாணி திருவிழாவைக் கொண்டாட திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இந்தத்திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணியும் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், அதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், மழை காரணமாக பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.