மாட்டுக்கறி உணவை போட்டோ எடுத்து பதிவிட்ட நெட்டிசனின் பதிவிற்கு சென்னை காவல் துறை பதிவிட்ட எச்சரிக்கை பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


பிரபல சமூகவலைதளமான ட்விட்டரில் இணையதள வாசி ஒருவர், தான் சாப்பிட இருந்த மாட்டுக்கறி உணவை புகைப்படம் எடுத்து, ‘மாட்டுக்கறி’ என்று பெயரில் பதிவிட்டு இருந்தார். இந்தப்பதிவிற்கு சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து,  ‘இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது என்றும் தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் எதிர் பதில் பதிவு பதிவிடப்பட்டது.  இதற்கு பலரும் கடுமையான எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர்.


 






இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை காவல்துறையின் ட்விட்டர் ஐடியை யார் நிர்வகிக்கிறார்..? அந்த பதிவில் என்ன தப்பு. என்ன பதிவிட வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரையை வழங்கி இருக்கிறது. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை.” என்று பதிவிட்டு இருக்கிறார். 


 










 


விளக்கம் அளித்த சென்னை காவல்துறை 


இதற்கு நெட்டிசன்கள் பலரும் உணவு என்பது தனிப்பட்ட உரிமை, யாரும் தலையிட முடியாது என்ற தொனியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தப்பதிவிற்கு விளக்கம் அளித்துள்ள காவல்துறை, “   தாங்கள்பதிவிட்ட ட்விட் சென்னை காவல் துறையின்  @chennaipolice பக்கத்தில் ரீட்விட் செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல.” என்று பதிவிட்டு இருக்கிறது.