தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. இதன் எதிரொலியாக கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ள காரணத்தினால் தமிழக அரசு சார்பில் அதற்காக தயாராகி வருகின்றனர் .இதற்காக கூடுதலாக கொரோனா படுக்கைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. 

 



அந்தவகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையில் புதியதாக 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் ,மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று திறந்து வைத்து இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 



 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு பொது மருத்துவமனைகளில் 1244 படுக்கைகளில் 625 ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் 1080 படுக்கையில், 385 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2324 படுக்கைகளில் 1010 படுக்கைகள் ஆக்சிஜன் கொண்ட படுக்கைகளாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளது.

 



கடந்த ஒரு வார காலமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை வரவுள்ளதாக தகவல்கள் வருகிறது. அதனை எதிர்கொள்ள திமுக அரசு வேகவேகமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகளை அதிகரித்து வருகின்றன.ஆகையால் கொரோனா மூன்றாம் அலைகள் வந்தாலும், தொற்று பாதிப்பு அதிகம் ஆனாலும், எத்தனை பெரிய அலைகள் வந்தாலும் அதனை சமாளிக்க திமுக தயாராக உள்ளது என தெரிவித்தார்.



பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினிகளை பயன்படுத்தியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மற்றும் தமிழக அரசின் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, காஞ்சிபுரம் மாவட்டத்தை கூறுவதோடு இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 



கடந்த 2 வாரமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.