வேலூர் நகர பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் போலி டீசல் உற்பத்தி ஆலை இயங்கி வருவதாக, வேலூர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், லத்தேரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அங்கு போலி டீசல் கைப்பற்றப்பட்டது. இது தாது பொருட்களாலான ஹைட்ரோகார்பன் (mixed mineral hydrocarbon oil ) எண்ணெய் என்பதும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் லத்தேரி காவல் துறையினர் தெரிவித்தனர் .
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி வேலம்பட்டு கேட் பகுதியில் கருணாகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே ஒதுக்குப்புறமாக கட்டிடம் ஒன்று உள்ளது. இதனை, திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த விநாயகா போர்வெல் கம்பெனி என்ற நிறுவனத்தினர், கடந்த 20 நாட்களுக்கு முன் வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த இடத்தில் அவர்கள் போலி பெட்ரோல், டீசல் தயாரிப்பதாகவும் . மேலும் தயாரிக்கப்படும் போலி பெட்ரோல் , டீசல்களை தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களுக்கும், லோக்கல் வாகனங்களுக்கும் டீசலுக்கு மாற்று பொருளாக சப்ளை செய்வதாகவும் லத்தேரி பெட்ரோல் பங்க் உரிமையாளரும் மற்றும் வேலூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர் சங்க செயலாளருமான சந்திரசேகரனுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் வந்தது. சங்க நிர்வாகிகளுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட சந்திரசேகரன் . அங்கு லிட்டர் கணக்கில் கேன்களில் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த போலி டீசல் எண்ணெயை, அவர்களின் மொபைல்ஃபோன்களில் வீடியோ எடுத்துக்கொண்டு பின்னர் காவல் துறையினருக்கும் பத்திரிகை துறையினருக்கும் தகவல் அளித்தனர் .
புகா
புகாரின் பேரில் அங்கு விரைந்துவந்த லத்தேரி காவல் நிலையத்தினர், அங்கு நிற்கப்பட்டிருந்த போர்வெல் லாரிகள், அந்த இடத்தின் சொந்தக்காரரான கருணாகரன் மற்றும் அங்கு வாடகைக்கு தங்கி இருக்கும் விநாயகா போர்வெல்ல் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய வேலூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர் சங்க செயலாளர் சந்திரசேகரன், ”அந்த இடத்தில் வாடகைக்கு இருக்கும் போர்வெல் நிறுவனத்தினர் , பெட்ரோல் தயாரிப்பின்போது மீதமாகும் கழிவு பொருட்களை வைத்து சில வேதியியல் பொருட்களை சேர்த்து போலியாக டீசல் எண்ணெய் போன்ற ஒரு திரவியத்தை தயார்செய்து, அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உதவியுடன் அங்கு உற்பத்தி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 1200 லிட்டர் போலி டீசல், போலி டீசல் தயாரிக்க பயன்படும் கெமிக்கல்கள் ஆகியவற்றை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய லத்தேரி காவல் ஆய்வாளர் கவிதா, “முதற் கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் பொருள், mixed mineral hydro carbon oil என்பதும் இதனை வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து போர்வெல் வண்டிகளில் உள்ள கம்ப்ரெஸ்ஸர்களுக்கு டீசல் எண்ணெய்க்கு பதிலாக மாற்றுப்பொருளாக பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமாக சொந்தமாகவே தயாரித்து, மற்ற வாகன உரிமையாளர்களுக்கு விற்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” என்று அவர் தெரிவித்தார் .