ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 2023 ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் பிறக்கவுள்ளது. இந்த முறை ஆங்கிலப் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளதால், பேருந்துகளில் சொந்த ஊருக்குச் செல்லவுள்ளனர். இதையொட்டி, சிறப்புப் பேருந்துகள் வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை)லிட்., மதுரை போக்குவரத்து கழக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் 550 சிறப்பு பேருந்துகள் 31.12.2022 முதல் 03.01.2023 வரை மதுரை. திண்டுக்கல் தேனி, பழனி விருதுநகர், அருப்புக்கோட்டை சிவகாசி, ராஜபாளையம், ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களின் வசதியை முன்னிட்டு தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும். பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.