சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்ட திட்டத்தின்படி,  சென்டிரல்-பரங்கிமலை, சென்டிரல்-விமான நிலையம் மற்றும்  விம்கோநகர்-விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.  இந்த வழித்தடங்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 42 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.  அவற்றில் சராசரியாக தினமும் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.


இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்:


இதனிடையே, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின்  இரண்டாம் கட்டமாக, ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தூரத்திற்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கி.மீ தூரத்திற்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரத்திற்கும் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 42.2கி.மீ. தொலைவுக்கு சுரங்கத்திலும், 76.3 கி.மீ தொலைவுக்கு உயர்மட்டத்திலும் இருப்புப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகளை 2026-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 45-க்கும் மேற்பட்ட இடங்களில் திட்டப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.


ரூ.206.64 கோடிக்கு ஒப்பந்தம்:


இந்நிலையில், அதன் ஒருபகுதியாக சென்னை மாதவரம் முதல் கோயம்பேடு வரையில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  ஜப்பானை சேர்ந்த JICA எனும் வங்கியின் நிதியுதவியுடன் KEC-VNC-JV ஆகிய கட்டுமான நிறுவனங்களுடன், ரூ.206.64 கோடி மதிப்பில்  ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக  சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஐந்தில் 16 மெட்ரோ ரயில் நிலைய இருப்புப் பாதைகள் அமைப்பது மற்றும் அதுதொடர்பான அனைத்து பணிகளும் இந்த நிதி மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. 


ரயில் நிலைய விவரங்கள்:


இதில், சி.எம்.பி.டி., அண்ணா நகர் கேவி மெட்ரோ, திருமங்கலம் சந்திப்பு, அண்ணாநகர் மேற்கு, ரெட்டேரி சந்திப்பு, சாஸ்திரி நகர், மாதவரம் பேருந்து நிலைய முனையம் மெட்ரோ, வேல்முருகன் நகர் மெட்ரோ, மஞ்சம்பாக்கம் மெட்ரோ உள்ளிட்டவை உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களாக அமைக்கப்பட உள்ளன. அதோடு, வில்லிவாக்கம் எம்.டி.எஸ் சாலை, வில்லிவாக்கம் பேருந்து முனையம், வில்லிவாக்கம், சீனிவாசன் நகர் மெட்ரோ, கொளத்தூர் சந்திப்பு மற்றும் மாதவரம் பணிமணை மெட்ரோ ஆகியவை சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்களாக அமைக்கப்பட உள்ளன என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.