பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்ய வரும் தமிழக அரசின் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். நாளை சாலை மறியல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார 13 கிராமங்களை உள்ளடக்கிய 4791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை துவக்கி உள்ளது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் மற்றும் பாதிக்கப்படும் கிராம மக்கள் 425  நாட்களாக  பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 


 

இந்நிலையில், பரந்தூர் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் வருகிற 26-ஆம் தேதியன்று விமான நிலைய அமைய உள்ள இடத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் குழு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (24-09-23) ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல்,கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

சென்னை பசுமை விமான நிலையம்..


 

சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.



 


இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


ஓராண்டை கடந்த தொடர் போராட்டம்


இந்நிலையில் 400-வது  நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஊர் மைதானத்தில் ஒன்றுகூடி கண்ணில் கருப்புக்கொடி கட்டிக்கொண்டு,கைகளில் கறுப்பு கொடி ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏற்றி கைகளில் ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கிராம மக்கள் கூறுவது என்ன ?


இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த இளைஞர் கவாஸ்கர் கூறியது, ”டெல்லியில் விவசாயிகள் ஓராண்டு காலம் மட்டுமே போராடினார்கள். ஆனால் எங்கள் கிராம மக்கள் ஓர் ஆண்டை கடந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம். கிராம மக்களின் வீடுகளை அழித்தும், விவசாய நிலங்களையும் அழித்தும் விமான நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன இருக்கிறது? மக்கள் தொகை பெருகிவரும் இந்த சூழலில், விவசாய நிலங்களை தான் அதிகரிக்க வேண்டும். தரிசு நிலங்களில் விமான நிலையம் அமைத்துக் கொள்ளட்டும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என தெரிவித்தனர்.