மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் இருந்த பழமை வாய்ந்த புங்கைமரம் வெட்டப்பட்டதை கண்டித்து இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வது போல் சமாதி எழுப்பி, பால் ஊற்றி அஞ்சலி பசுமை தாயக அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலசயன பெருமாள் கோயில்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் 63-வது ஸ்தலமாகும். கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபா மாதம் நரிக்குறவ பெண் அஸ்வினி என்பவர் அன்னதானம் சாப்பிட வந்து, அவர் அவமதிக்கப்பட்டு அடித்து விரப்பட்டார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி முதல்-அமைச்சர் தலையிடும் நிலைக்கு சென்றது. இந்நிலையில் தற்போது இக்கோயில் முன் பகுதியில் கார், ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பழமை வாய்ந்த புங்கை மரம் ஒன்று இருந்தது. சுற்றுலா கார், ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த மரத்தின் நிழலில் ஓய்வு எடுப்பது வழக்கம்.
ஊர்வலமாக சென்று கண்டன கோஷம்
இந்நிலையில் கோயில் நிர்வாகம் எந்தவித முன் அறிவிப்பு இன்றி பசுமை தீர்ப்பாய விதிகளை மதிக்காமல் இரவோடு, இரவாக இந்த மரத்தை பொக்லைன் மூலம் வேறோடு வெட்டி எடுத்துவிட்டார்கள். மாற்று இடத்திலும் அந்த மரம் நடப்படவில்லை. கோயில் நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து பசுமை தாயக அமைப்பினர் மற்றும் மாமல்லபுரம் கார், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஒருங்கிணைந்து எந்தவித முன் அறிவிப்பின்றி இரவு நேரத்தில் புங்கை மரத்தை வெட்டிய கோயில் நிர்வாகத்தை கண்டித்து பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கண்டன கோஷம் எழுப்பினர்.
பால் ஊற்றி மாலை அணிவித்து
பின்னர் மரம் வெட்டப்பட்ட இடத்தில் சமாதி எழுப்பி இறந்த மனிதர்களுக்கு செய்யும் இறுதி சடங்கு போன்று பால் ஊற்றி மாலை அணிவித்து பசுமை தாயக மாவட்ட செயலாளர் செந்தில்நாத் தலைமையில், பசுமை தாயக மாநில துணை செயலாளர் ஐ.நா.கண்ணன் முன்னிலையில், மெழுகுவர்த்தி ஏத்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மரத்தை வெட்டிய கோயில் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
பசுமை தாயகம் மற்றும் மாமல்லபுரம் ஓட்டுனர் சங்கத்தினர் புகார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பி.வி.கே.வாசு, மாநில அமைப்பு செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம், மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, மாமல்லபுரம் நகர செயலாளர் ரா.ராஜசேகர், மாமல்லபுரம் ஓட்டுனர் சங்க தலைவர் ஆர்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பசுமை விதிகளை கடைபிடிக்காமலும், வனத்துறை அனுமதியின்றி, புங்கை மரத்தை வெட்டியதாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையில் கோயில் நிர்வாகத்தினர் மீது பசுமை தாயகம் மற்றும் மாமல்லபுரம் ஓட்டுனர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.