அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எத்திக்கல் ஹேக்கிங் பயிற்சி, செம்மைப் பள்ளி, கலைத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
''* 47 லட்சமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 53 லட்சம் பேராக உயர்ந்திருக்கிறது.
* 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 21 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 33 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, படிக்க, எழுத, புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த, ரூ.30 கோடி மதிப்பீட்டில், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை இன்னும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டிய தேவை உள்ளது.
* 150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
செம்மைப் பள்ளி
* கல்வி, கவின் கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு என கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உலகத் தரத்திலான பள்ளி உருவாக்கப்படும். சென்னையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்தப் பள்ளி அமைக்கப்படும்.
* பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களின் உதவியுடன் உள்ளுறைப் பயிற்சி வழங்கப்படும்.
ஆசிரியர்களுக்குத் தொல்லியல் பயிற்சி
* தொல்லியல் துறை குறித்து 1000 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.
* மண்டல அளவிலும் மாநில அளவிலும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாரண, சாரணியர் முகாம்கள் நடத்தப்படும். கல்வி இணைச் செயல்பாடுகளைப் புதுப்பிக்கும் வகையில், மாணவர் மன்றங்கள் ஊக்குவிக்கப்படும்.
கலைத் திருவிழா
* மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கலைத் திருவிழா நடத்தப்படும்.
எத்திக்கல் ஹேக்கிங் பயிற்சி
* கணினி நிரல், எந்திரவியல் தொழில்நுட்பங்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். இணையப் பாதுகாப்பு மற்றும் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாநில அளவில் டெக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும்.
மாணவர்களின் உடல் நலன் காக்க சிறப்புப் பயிற்சிகள்
* மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், உடலியக்க நிபுணர்களின் வழிகாட்டலோடு வரும் கல்வியாண்டு முதல் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
பள்ளிகளில் காய்கறித் தோட்டம்
பள்ளிகளில் செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களால் காய்கறித் தோட்டம் ஏற்படுத்தப்படும்.
சதுரங்க ஒலிம்பியாட்
பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மாணவர், ஆசிரியர் மாத இதழ்
தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' இதழும், உயர் வகுப்பு மாணவர்களுக்கு 'தேன்சிட்டு' இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும். ஆசிரியர்களுக்குக் 'கனவு ஆசிரியர்' எனும் மாத இதழ் வெளியிடப்படும். ரூ.ஏழு கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசு மேல்நிலை கணினி வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது வந்தது. அதனை முழுமையாக ரத்து செய்து அதற்கான செலவு ரூபாய் 6 கோடியை அரசே ஏற்கும்.''
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.