சென்னையில் பெய்த திடீர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 6 சர்வதேச விமானங்கள் உட்பட, 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல், திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
விமானங்கள் தாமதம் காரணமாக பயணிகள் அவதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. ஆனால் இரவு 8 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீசியபடி, வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இரவு 8:30 மணியில் இருந்து நள்ளிரவு வரை, அவ்வப்போது விட்டு விட்டு கனமழையும் லேசான மழையும் ஆக மாறி மாறி பெய்து கொண்டு இருந்தது. அதோடு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னல் சூறைக்காற்றும் இருந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
மோசமான வானிலை
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் நேற்று இரவு 9:45 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணம் சென்னையில் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
வானில் வட்டமடித்து
அதைப்போல் கண்ணூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து, வானிலை ஓரளவு சீரடைந்த பின்பு தாமதமாக சென்னையில் தரை இறங்கின.
11 விமானங்கள் தாமதம்
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான கோலாலம்பூர் விமானங்கள் 2, மற்றும் துபாய், குவைத், சிங்கப்பூர் ஆகிய 5 சர்வதேச விமானங்கள், மும்பை விமானங்கள் 2, ஹைதராபாத் விமானங்கள் 2, மற்றும் ஜெய்ப்பூர், பெங்களூர், ஆகிய 6 உள்நாட்டு விமானங்கள், மொத்தம் 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் வருகை விமானங்கள் 5, புறப்பாடு விமானங்கள் 11, மொத்தம் 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதில் ஒரு விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. விமான சேவைகள் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.