தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் நகர்ந்து நவ.18 ஆம் தேதி (நாளை) தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும்,காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவ.18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதைப்போல,நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். மேலும்,மத்திய மேற்கு,தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில் இன்றும்,நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை நீர் திறப்பு 1,000 கனஅடியிலிருந்து 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி முதல் கனமழை காரணமாக ஏரியில் 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுவந்தது. படிப்படியாக மழை குறைந்ததால் நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 405 கன அடியாக நீர்வரத்து உள்ளது. மொத்தம் உள்ள 24 அடி ஏரியின் கொள்ளளவில் 21.80 அடிக்கு நீர் உள்ளது.
இந்நிலையில் 12 மணி அளவில் மீண்டும் 500 கன அடி நீர் கூடுதலாக திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 2,000 கன அடியாக உள்ளது. கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நீர் திறக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.