தமிழக வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு இன்று அதிகனமழை என்று கூறி வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை (நவ.29) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவிருந்த நிலையில் அது நாளைக்குப் பதில் நாளை மறுநாள் (நவ.30) ஆம் தேதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிககனமழை வாய்ப்புள்ளதாகவும், அதன்படி தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் இன்று மிககனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்றும் தெரிவித்துள்ளது. மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மேற்கு, மத்திய மேற்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் நாளை (நவம்பர் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகளை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவாரூரில் நாளை (நவம்பர் 29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கன மழை காரணமாக 29,30 இரண்டு நாட்களுக்கு பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு.