உயிரிழந்த முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் தம்பி மகளுக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. ஹோமியோபதி மருத்துவரான இம்ரான், மஸ்தான் தம்பி மகளை திருமணம் செய்து உள்ளார். இம்ரான் திருமணம் ஆனதிலிருந்து, முன்னாள் எம்பி மஸ்தானிடம் நெருக்கமாக பழக முயற்சி செய்து உள்ளார். மஸ்தானுக்கும் நம்பிக்கைக்குரிய ஒரு ஆள் தேவை என்பதால் உறவினரான இம்ரானை, பல முக்கிய தகவல்களை அவரிடம் பரிமாறியுள்ளார். அதேபோல் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் பொழுதெல்லாம் அவரை ஓட்டுனராக பயன்படுத்தி உள்ளார். முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ளும் பொழுதெல்லாம் நம்பிக்கை கூறிய ஆளாக இம்ரானை நம்பியுள்ளார். இருந்தாலும் தனக்கு முன்னாள் எம்பி யின் நெருக்கம் இருப்பதால் தனக்கு எப்படியாவது திமுகவில் மரத்துவர் அணி அல்லது கட்சியில் ஏதாவது பதவி கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்து வந்துள்ளார்.




மேலும் அவ்வப்போது தன்னுடைய செலவுக்காக இலட்சக்கணக்கில் இம்ரான், மஸ்தானிடம் இருந்து பெற்றுள்ளார். வங்கி கணக்கு மூலம் 8 லட்ச ரூபாயும், நேரில் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு லட்ச ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார் . இந்நிலையில் மஸ்தான் தன்னுடைய மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்ய பணம் தேவைப்பட்டுள்ளது . இதனால் இம்ரானிடம் மஸ்தான் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் ஒரு கடந்த சில வாரங்களுக்கு முன், பலர் முன்னிலையில் பணம் தருகிறாயா இல்லையா என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. தனக்கு  கட்சியில் பதிவையும் வாங்கித் தரவில்லை , கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டு அசிங்கப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த இம்ரான், தனது மாமனார் மஸ்தானை ஏதாவது செய்ய வேண்டுமென சதி திட்டம் தீட்டியுள்ளார்.


இதுகுறித்து தனது சித்தி மகனான தமீம் என்கின்ற சுல்தானிடம் தெரிவித்துள்ளார் . சுல்தான்  தனக்கு ஆட்கள் தெரியும் எனவும், 3 லட்ச ரூபாய் ஏற்பாடு செய்தால் போட்டு தள்ளி விடலாம் எனவும் கூறியுள்ளார். கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால், கொலை செய்தால் நாம் மாட்டிக் கொள்வோம் என்பதால்,  மாட்டிக்கொள்ளாமல் கொலை செய்வதற்கு இம்ரான் சதி திட்டம் தீட்டினார். 





இதனை அடுத்து கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் செங்கல்பட்டு அருகே தனக்கு தெரிந்த ஒருவரிடம் பணம் வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்துள்ளார். இதனை நம்பி, தனது மருமகன் தான் என நினைத்து மஸ்தான் அவருடன் காரில் வந்துள்ளார். இம்ரான் வழக்கம் போல் காரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்பொழுது குரோம்பேட்டை அருகே சுல்தான் மற்றும் அவருடைய நண்பர் நசீர் ஆகியோர் ஏறி உள்ளனர். இதுகுறித்து மஸ்தான் கேட்ட பொழுது நம்முடைய உறவினர்கள் தான் செங்கல்பட்டில் இறக்கிவிடலாம் என கூறியுள்ளார்.




தொடர்ந்து கார் சென்று கொண்டிருந்த பொழுது செங்கல்பட்டு டோல்கேட் பகுதியை தாண்டி பழவேலி  காட்டுப்பகுதியில் காரை திடீரென நிறுத்தி உள்ளனர். திட்டம் தீட்டியது போல் மூக்கை மற்றும் வாயை பொத்தி மஸ்தானை கொலை செய்துவிட்டு , அங்கு இருந்து தப்பிக்க , தப்பீக் என்பவர் முன்கூட்டியே தனது நண்பர் லோகோஷ் உடன் காரை தயார் நிலையில் வைத்து இருந்தார். அதில் தப்பி சென்று உள்ளனர்.  கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அவர் துடித்துக் கொண்டிருக்கிறார். அவரை காப்பாற்றுங்கள் என தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்க பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்து ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு உள்ள உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மகன்  ஷாநவாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின . 5 நபர்களை  கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.