திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கடுகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமி காந்தன் வயது (43) இவருடைய மனைவி ராஜேஸ்வரி வயது (31). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரம் முன்பு லட்சுமி காந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் வெளியே சென்ற லட்சுமி காந்தன் திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து இவர்கள் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் உள்ள புதரில் காயத்துடன் சடலமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம மக்கள் பெரணமல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். செய்யார் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆய்வாளர் நந்தினி தேவி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 




இதுகுறித்து காவல்துறையினர் செய்யார் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் ராஜேஸ்வரி திருமணத்திற்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரை காதலித்து இருந்தார். இருவரும் காதலித்த நிலையில், பெற்றோர், உறவினர் லட்சுமி காந்தனுக்கு ராஜேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும் சிவகுமார் ராஜேஸ்வரியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். லட்சுமிகாந்தன் குடிப்பழக்கம் உள்ளவர். இதனால் ராஜேஸ்வரி செய்யார் சிப்காட் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அங்கே சூப்பர்வைசராக வேலை செய்யும் வெண்பாக்கம் தாலுகாவை சேர்ந்த கனகம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் உதயசூரியனுடனும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.


 




 


இதனால் ராஜேஸ்வரி சிவகுமாரிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் நான் தான் ராஜேஸ்வரியின் கணவர் என்று கூறி ராஜேஸ்வரி வேலை செய்யும் சூ கம்பெனிக்கு சென்று உதயசூரியன் ராஜேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவர்கள் மீது புகார் செய்தார். இதுகுறித்து நிர்வாகம் இருவரையும் வேலை விட்டு நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேஸ்வரி உதயசூரியனை வற்புறுத்தினார். அதற்கு உதயசூரியன் உன் கணவனை  தீர்த்து கட்டிவிட்டு நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். இது குறித்து இவர்கள் இருவரும் கலந்து ஆலோசித்து கடந்த வாரம் உதயசூரியன் மற்றும் அவருடைய மைத்துனர் பாண்டியன்  ஆகிய இருவரும் லட்சுமி காந்தனுடன் மது குடிக்க வயல்வெளிக்கு அழைத்து சென்றனர்.


 


 




அங்கு லட்சுமி காந்தனை கழுத்து நெரித்தனர். இருப்பினும் சந்தேகம் தீரவில்லை என்று கையில் இருந்த கத்தியால் லட்சுமி காந்தின் கழுத்தை அறுத்தனர். பின்னர் அருகாமையில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து செய்யார் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தூசி ஆய்வாளர் குமார், ஆய்வாளர் நந்தினி தேவி ஆகியோர் கொலையாளிகள் மூன்று பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் சம்பவத்தால் கணவனையே கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.