கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி கல்லூரி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இதை சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவியின் பிரேதத்தை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையில் மாணவியின் மரணம் பின்னணி குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கி பயின்று வந்த மற்ற மாணவ மாணவிகளை பெற்றோர்கள் மூலம் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பள்ளி மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டி உள்ளனர்.



வரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வருவதாக தனது தாயிடம் கூறிய ஸ்ரீமதி  உயிரிழந்து இருப்பது மாணவியின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று காலை விடுதி மின்சார விளக்குகளை அணைக்க வந்த விடுதி காவலர், மாணவியை அங்கு கிடப்பதை முதலில் பார்த்துள்ளார். அவர் எப்போது உயிரிழந்தார் என்று சரியாக தெரியவில்லை. அதுதொடர்பாக விசாரணை செய்து வருகிறோம். மேலும் அவர் உடலை முதலில் கண்டெடுத்த போது உடல் முழுவதும் சில்லென்று இருந்துள்ளது. இதன் மூலம் அவர் முன்பே உயிரிழந்து இருக்கிறார். தற்போது அவர் மரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம் என்று காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். 



மேலும் மாணவியின் பிரேதத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள உடற் கூறாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அன்றைய தினம் விடுதியில் தங்கிப் பயின்று வந்த மற்ற மாணவர்களைப் பெற்றோர்கள் மூலம் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பள்ளி மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டினார். வரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வருவதாக தனது தாயிடம் கூறிய அவர் திடீரென்று உயிரிழந்து இருப்பது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பெற்றோர், தங்கள் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டார் எனவே மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவியின் உடற் கூறாய்வு பரிசோதனையை வீடியோவாக பதிவு செய்யப்படும். பரிசோதனையின் போது உறவினர் ஒருவரை அனுமதிக்கப்படுவார் என்று உறுதியளித்தார். 


இதுகுறித்து மாணவியின் தாயார் செல்வி தெரிவித்தாவது :- எனது மகள் அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வந்தாள். பதினொன்றாம் வகுப்பு வெளியே சென்று படிப்பதற்கு மாற்றுச் சான்றிதழ் கேட்டோம் ஆனால் தர மறுத்தனர். இதையடுத்து எனது மகள் அங்கேயே படிப்பைத் தொடர்ந்தாள். பின்னர்‌ அவள் 12ஆம் வகுப்பு சென்ற பிறகு கடந்த ஜூலை 1ஆம் தான் பள்ளி விடுதியில் சேர்த்தேன். ஆனால் 13ஆம் தேதி எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்தது, அதில் உங்கள்‌ மகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.‌ அவள் உயிருடன் இருப்பதாக கூறினர். இதையடுத்து அடுத்த அரை மணி‌நேரத்தில் எங்களை மீண்டும் அழைத்து உங்கள் மகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்தபோது உங்களது மகள் உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனைக்குக் கொண்டுவந்ததாக கூறினர்.



பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த எனது மகளின் உடலைச் சென்று பார்த்தபோது தலை மற்றும் மார்பு பகுதிகளில் மட்டுமே அடிப்பட்டு இருந்தது. பள்ளிக்குச் சென்று என்று மகள் உயிரிழந்த இடத்தை பார்த்தபோது அங்கும் ரத்த அடையாளம் இல்லை. பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோ பதிவை காட்ட வலியுறுத்தினோம். ஆனால் மறுத்துவிட்டதாக கூறுகிறார். இரவு 10.30 மணிக்குப் பதிவான வீடியோ ஒன்றை காட்டினர். அதில் எதுவும் தெரியவில்லை. அவர்கள் பள்ளி முழுவதும் வைத்திருந்த எந்தவொரு கண்காணிப்பு கேமிராவிலுமா பதியாமல் இருந்திருக்கும். ஆனால் எந்த வீடியோ காட்சிகளை காட்ட‌ மறுத்துவிட்டனர் மேலும் எனது மகள் கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்ததாக பொய்யுரைக்கின்றனர். விடுதியில் படிக்கின்ற மாணவி பள்ளி நிறைவடைந்ததும் சீருடை கூட மாற்றாமல் அதே பள்ளி சீருடையில் உயிரிழந்து இருக்கிறார். எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. எங்கள் மகளின்‌‌ மரணம் தொடர்பாக காவல் துறையினர் சரியான முறையில் விசாரணை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தாவது :- 


இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் கூறியதாவது, மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், இரண்டு ஆசிரியர்கள் நீ படிக்கவில்லை விளையாட்டுத் தனமாக இருப்பதாகவும், அதை அனைவரின் முன்பு கூறி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். அதனால் உயிரிழப்பதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மாணவியின் தாயார் அவர் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு வைத்தார். அதன் அடிப்படையில் தற்போது விசாரணை செய்து வருகிறோம். மேலும் மாணவி உடலை உடற் கூறாய்வின் போது இரண்டு மருத்துவர்கள், அதில் ஒரு பெண் மருத்துவர். மேலும் உடற் கூறாய்வு செய்ய தடயவியல் மருத்துவர் இருக்கும்படி செய்தோம். இதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்துள்ளோம். அதுமட்டுமின்றி உடற் கூறாய்வு பரிசோதனைக்கு முன்பு உயிரிழந்த மாணவி உடலை அவர் குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.




தற்போது இந்த மாணவி மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சாட்சிகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் சில சாட்சிகளை விசாரணை செய்து வருகிறோம். மேலும் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர்களிடமும் விசாரணை செய்துள்ளோம். கடிதத்தில் குறிப்பிட்டபடி ஆசிரியரால் மாணவி தொடர்ந்து அவ்வாறு நடத்தப்பட்டாரா என்பது தொடர்பாக உடன் பயிலும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இப்படி முழுமையான விசாரணை நிறைவடைந்த பிறகே இந்த வழக்கின் தன்மை குறித்து முடிவெடுக்க முடியும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக உயிரிழந்த மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள உடற் கூறாய்வு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகளின் மரணத்திற்கு முறையான விசாரணை செய்து வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் என்று உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.



குறிப்பாக மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். அந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்துத் தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த பத்தாண்டில் இதேபோன்று மாணவிகள் அப்பள்ளியில் இறந்து போயிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இவருடன் டி.டி.வி.தினகரன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் முறையான உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண