இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , பல்வேறு பகுதிகளில் அலுவலகம் மற்றும் வீடுகள் , தெருக்களின் சந்திப்பு மற்றும் சாலை பகுதியில் விநாயகர் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. 


பொது மக்கள் மற்றும் நண்பர்கள் குழு அவர்கள் இருக்கும் பகுதிகளில் பெரியதாக விநாயகர் சிலை வைப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட்டு விநாயகர் சிலை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கப்படும் போது அனைவரின் கவனம் ஏற்க்கும் வகையில் வித்தியாசமாக விநாயகர் உருவாக்கப்பட்டு , வழிபாட்டிற்காக வைக்கின்றனர். அவ்வாறு வித்தியாசமாக இருக்கும் போது பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து விநாயகரை வணங்கி விட்டு செல்வார்கள்.


இந்த வகையில் , சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் சந்திப்பு அருகே இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றம் தரணி விநாயகர் குழு சார்பில் தரணி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது.


40 அடி உயரமுள்ள இந்த தரணி விநாயகர் காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் தாம்புல தட்டுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 901 காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் 4500 தாம்பூல தட்டு 3200 சங்கு கொண்டு 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 21 நாட்களில் இந்த விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளது.


9 நாட்கள் இந்த விநாயகர் வைக்கப்பட்டு அதன் பிறகு பிரித்து பக்தர்களுக்கு காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் தாம்பூல தட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.


இதே போன்று சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஸ்ரீ கணேச அறக்கட்டளை சார்பில் மங்கள மூர்த்தி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. 500 கிலோ மஞ்சள் மற்றும் மூங்கிலால் சயன கோளத்தில் இந்த விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை இந்த விநாயகர் பிரிக்கப்பட்டு மஞ்சள் அப்பகுதி மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.


இதே போன்று சென்னை கொளத்தூர் கென்னடி சதுக்கம் பகுதியில் கென்னடி சதுக்க நண்பர்கள் குழு சார்பில் வெற்றி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் பிஸ்கட் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க பிஸ்கட்டால் இந்த விநாயகர் செய்யப்பட்டுள்ளது. 3060 பிஸ்கட் மற்றும் மூங்கில் கொண்டு இரண்டு லட்ச ரூபாய் செலவில் 18 நாட்களில் இந்த விநாயகர் செய்து முடிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் கழித்து இந்த விநாயகர் பிரிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு பிஸ்கட் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.


இவ்வாறு கொளத்தூர் தொகுதியில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ள இந்த மூன்று விநாயகர்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர்.


இதே போல் சென்னை வளசரவாக்கம் பகுதியில் விவசாய விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் தலையில் தலைப்பாகை அணிந்து , கையில் மண்வெட்டி மற்றும் கலப்பை வைத்து கொண்டு இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.