சென்னையில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், 1,519 இடங்களில் மட்டுமே சிலை வைக்க அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.
விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளும், விற்பனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 16,500 போலீசார் மற்றும் 2,000 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இச்சூழலில், சென்னையில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரப்பட்டது.
ஆனால், 1,519 இடங்களில் சிலை வைக்க மட்டுமே சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்து அமைப்புகள் மட்டுமின்றி பொதுமக்களும் விநாயகர் சிலைகளை வாங்கி தங்கள் வீடுகளில் வைத்து வழக்கப்படுவது வழக்கம். இதையடுத்து, கடந்த ஒரு மாதமாகவே விநாயகர் சிலைகள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி:
இதற்கிடையே, விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. பிளாஸ்டர் ஆப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை அனுமதிக்கக் கூடாது என காவல்துறைக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதேபோன்ற கட்டுப்பாட்டை ஏற்கனவே, மும்பை உயர் நீதிமன்றம் விதித்தது.
வழக்கத்தை விட நடப்பாண்டில் விநாயகர் சிலைகளுக்கான ஆர்டர்கள் அதிகளவு குவிந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விதித்துள்ள விதிப்படி 15 அடி வரை விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் பொதுவாக 10 அடிக்கும் குறைவில்லாமல் உயரமாக இருக்கும் என்பதால் அந்த சிலைகளை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கும் பணிகளில் சிலைகளை ஆர்டருக்கு அளித்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: Vinayagar Chaturthi 2024: 30 நிமிடங்களில் 750 களிமண் விநாயகர் சிலைகளை தயாரித்து மாணவர்கள் சாதனை