தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் , மற்றவர்களைப் போல அவர்களுடைய அன்றாட தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்ய இயலாது என்பது அனைவரும் அறிந்ததே .




குறிப்பாக அவர்கள் தினசரி இயற்கை உபாதைகள் (சிறுநீர் மற்றும் மலம் ) வெளியேற்றுவதற்கு சில குறிப்பிட்ட மருத்துவ உபகரணங்கள் இருந்தால் மட்டுமே  அவர்கள் ஒவ்வொரு நாளையும் இயல்பாக கடக்க முடியும் . இல்லையேல் இயற்கை உபாதைகளை வெளியேற்ற முடியாமல் விரைவில் மரணமடையவும்  நேரிடும் .இவர்களின் அன்றாட போராட்டத்தை  நீக்கும் வகையில் தான் இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள , மாநில சுகாதார இயக்கத்தின் மூலம்  ஆண்டுதோறும் (PARA -QUAD KIT) பாரா க்வாட் கிட்- கள் வழங்கப்பட்டு வருகிறது. கதீட்டர் , யூரோ பேக்ஸ் (சிறுநீர் பைகள் )  ,  ஜெல் ,கை உரைகள் , ரப்பர் ஷீட்ஸ் போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களும் ,லிக்விட் பாரஃபின் என்ற ஒரு சிரப் வகையும்  மற்றும் பைசகோடைல் என்ற மாத்திரை வகையும் அடங்கிய 13 வகையான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக வழங்கப்படுகின்றது   .




மத்திய - மாநில அரசுகள்  இத்தகைய உரிய முயற்சிகள் எடுத்தாலும் மாவட்ட மருத்துவ  அதிகாரிகள் காட்டும் அலட்சிய  போக்குகளால் இந்த தொகுப்பு  மாற்று திறனாளிகளுக்கு சரிவர சென்று அடைவதில்லை என்று சென்னையை மையமாக கொண்டு இயங்கும் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், தமிழ் நாடு மருத்துவ துறை தரவுகளின்படி , தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பில் , தமிழ் நாட்டில்  உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த (புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உற்பட)  1792 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் . 


தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி,  நபர் ஒருவருக்கு  9,009 ருபாய் என தமிழ்நாட்டில் உள்ள 1792 மாற்றுத்திறனாளிகளுக்கு  ஆண்டுதோறும் ஒரு கோடியே 51 லட்சத்தை தேசிய சுகாதார இயக்கம் இவர்களது  பாரா க்வாட் கிட்டுக்கான ஒதுக்கி வருகின்றது என்ற தகவலை தெரிவித்தார். இந்த உயிர்காக்கும் உபகரணங்களின்  தாமதம் குறித்து நம்மிடம் பேசிய தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் மாநில பொருளாளர் கருணாகரன் ,  பல வருடங்களாக எங்களது அமைப்பு செயல்பட்டு வந்தாலும் , கடந்த 2015 ஆம் ஆண்டு தான் எங்களை போன்ற தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை ஒன்று இணைத்து , எங்களது அமைப்பை  சொசைட்டி ஆக்ட்-யின் கீழ் பதிவு செய்தோம்  .




மூன்று ஆண்டு தொடர் முயற்சிக்கு பின்பு எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டு , எங்கள் அமைப்பை சார்ந்த அனைவருக்கும் பாரா க்வாட் கிட் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்ற அரசனை டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் மாநில சுகாதார துறையால் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ சேவை மையம் (TNMSC ) மூலமாக பெறப்படும் இந்த இலவச தொகுப்பினை  எங்களுக்கு நேரடியாக   அரசு மருத்துவமனைகள் மூலமாக  வழங்கப்படவேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையிலும் சென்னை , மதுரை ,திருவள்ளூர் ,  கோவை , திருச்சி , வேலூர் , திருப்பத்தூர், தர்மபுரி , நீலகிரி , கன்னியாகுமாரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் எங்கள் அமைப்பை சேர்ந்த 584 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தொகுப்பு சென்று அடையவில்லை . இந்த 584 மாற்றுத் திறனாளிகளில்  , 194 மாற்றுத்திறனாளிகள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இந்த மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் தண்டுவடம்  பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்குள்ளே பல அவமானங்களை சந்திக்கின்றனர் . பெரும்பாலானோர் குடும்ப உறுப்பினர்களாலேயே வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது .




தினமும் அவமானங்களையும் , வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரங்களையும் தினம் சந்தித்து வரும் மாற்றுத்திறனாளிகள்  எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று எங்கள் அமைப்புக்கு கடிதங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும்  தெரிவித்து வருகின்றனர் . எனவே  மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக இந்த பாரா க்வாட் கிட் டை வழங்கவேண்டும் என்ற எங்களது கனிவான கோரிக்கையை தமிழக அரசுக்கும் , மருத்துவ துறை அதிகாரிகளுக்கும் வைக்கின்றோம் என்று தெரிவித்தார் . இது தொடர்பாக வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை  துணை இயக்குனர் (பொறுப்பு) அவர்களை தொடர்புகொண்டபொழுது , எங்களுக்கு பயனாளிகள் பெயர் பட்டியலை உறுதி செய்வதில்  சில குழப்பம் நிலவுவதாகவும் , அதனை விரைவில் சரிசெய்து , உரிய பயனாளிகளிடம் மருத்துவ உபகாரங்களை ஒப்படைப்போம் என்றும் தெரிவித்தார் .