விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் கிராமத்தில் சுமார் 500 பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அணைத்து பிரிவினருக்கும் பொதுவாக செல்லியம்மன் கோவில் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. விழுக்கம் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலை அனைத்து பிரிவினரும்  வழிபட்டு வருகின்றனர். இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டுக்குள் வராத இந்த கோவிலை பல ஆண்டுகளாக  கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து  சித்திரை மாதத்தில் திருவிழா எடுத்த கொண்டாடி வருகின்றனர் .


இக்கோயில் திருவிழா நேரங்களில் தாய்வீட்டு சீதனமாக அங்கிருக்கும் பட்டியலின  மக்கள் சாமிக்கு உடைகள், பூ, பழங்கள் கொண்டுசென்று வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் கோயிலைப் புதுப்பிப்பது என்று முடிவு செய்து அதற்கான பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. கோயில் புதுப்பிக்கும் பணிக்காக ஆதிதிராவிட மக்கள் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பராமரிப்புப் பணியை முன்னின்று நடத்திய மாற்று சமூகத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை என்பவர் அந்த பணத்தை வாங்க மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு கோயில் கட்டி முடிக்கப்பட்டு 29. 4.2021 அன்று கோயில் கும்பிஷேகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது  .


அந்த நேரத்தில் தான் பட்டியலின மக்களுக்கு மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களால் அதிர்ச்சி காத்திருந்தது. கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஒரு நாள் முன்னதாக ’கும்பாபிஷேகம் செய்யும்போது பட்டியலின மக்கள் யாரும் அதில் கலந்துகொள்ளக்கூடாது . அப்படி கலந்துகொண்டால்  இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில்  மாற்று சமூகத்தினர் ஒலிபெருக்கியில் அறிவித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த பட்டியலின  மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளனர் .


கும்பாபிஷேகத்திற்கு அடுத்த நாள் 30.04. 2021 அன்று பட்டியலின  மக்கள் சார்பில் வழக்கம் போல சீர்வரிசை எடுத்துக் கொண்டு செல்லியம்மனை வழிபடச் சென்றபொழுது கோயில் வளாகத்தில் இருந்த மாற்று சாதியினர் இவர்களைப் பார்த்ததும் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறி விட்டனர். தங்கள் ஒடுக்கப்படுவதை உணர்ந்து மனவேதனை அடைந்த அம்மக்கள் தாங்களாகவே செல்லியம்மனுக்கு படையல் செய்து வழிபட்டு வீடு திரும்பினர் . பின்னர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமையில் சிலர் கூடி , பட்டியலினத்தவரால் சாமிக்கு சார்த்திய உடைகள், பூக்கள், பழங்களை அகற்றி அவற்றை ஏரியில் வீசியெறிந்துவிட்டு ’கோயில் தீட்டுப்பட்டு விட்டது’ என்று சொல்லி கழுவி சுத்தப்படுத்தி யாகம் நடத்தினர். அதுமட்டுமின்றி ’இனிமேல் ஆதிதிராவிட மக்கள் அந்தக் கோயிலில் வழிபடவரக்கூடாது’ என்ற  எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர் .


பட்டியலினத்தவரின் பலகட்ட  சமாதான முயற்சிகள்  பலனளிக்காததால் கடந்த திங்கட்கிழமை  (07.06.2021 ஆம் தேதி) திண்டிவனம்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் , பட்டியலின பிரிவை சார்ந்தவர்கள் எழுத்துபூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் தலைமையில் இது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எம்.பி., இன்று தமிழ்நாடு அரசு  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் P  K சேகர் பாபுவுக்கு இந்த சம்பவம் குறித்து விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .




அதில் ரவிக்குமார்,  இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் விழுக்கம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலை ஆய்வு நடத்தி அந்த கோவிலை அணைத்து தரப்பினரும் வழிபடுவதற்கு ஏதுவாக இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்மேலும் அவரது கடிதத்தில் "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் பணியாற்றும் கிராமக் கோயில் பூசாரிகளின்  பாதுகாப்பை கருத்தில்கொண்டு , கடந்த 2001-ஆம் ஆண்டு அரசு சார்பில் அரசனை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அரசாணை மூலம்  , கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைத்து அணைத்து கோவில் பூசாரிகளுக்கும்  மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது .


தற்பொழுது விழுக்கம் கிராமத்தில்  நடந்த சம்பவம்போல் வேறு எங்கும் நடக்காது இருக்க, இந்த  அரசாணையில் ,'அனைத்துத் தரப்பினரும் வழிபடும் கோயில் பூசாரிகளுக்கு மட்டும் தான் ஓய்வூதியம் வழங்கப்படும்'  என்ற விதியைச் சேர்த்தால் சமூகத் தடைகள் அகற்றப்பட்டுத் திருக்கோயில்களில் சமத்துவம் ஏற்பட உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்குச் சொந்தமான உடைமைகளை மீட்பதில் உடனடியாகக் கவனம் செலுத்தி சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்டெடுத்துள்ள தங்களின் (அமைச்சர் சேகர் பாபுவின்) முயற்சி பாராட்டுக்குரியது என்றும், இதேபோல் அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்கள் பலவற்றுக்கும் அப்படி நிலங்கள் சொத்துகள் உள்ளன, அவற்றையும் மீட்பதற்குத் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது கடிதத்தில் கூறியுள்ளார்.