தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் மீண்டும் வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டாம் அலையில் இருந்து மீண்டுள்ள, தமிழகத்தில் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவத் துறையினர் எச்சரித்து வருகின்றனர். எனவே, தமிழகத்தில் மூன்றாவது அலையை முன்கூட்டியே இதை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம், அதுபோன்ற சமயங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள். இதை தடுக்கும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல் உள்ளிட்ட விழாக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தடை செய்து உத்தரவிட்டு இருந்தார்.
இதேபோல் நாளை ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் ஆடி கிருத்திகை விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கோவில் திருவிழாக்கள் என்பது மக்கள் அதிகம் கூடுவதால் பரவல் எளிதில் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதை அடிப்படையாகக் கொண்டு முக்கிய கோயில்களில் இன்று முதல் 3 நாளுக்கு தரிசனம் ரத்து என தமிழக அரசு அறிவித்தது.
அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகர் கோவில், குமரக்கோட்டம், இளையனார் வேலூர் முருகர் கோவில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் இன்று முதல் மூன்று நாளை சாமி தரிசனம் மேற்கொள்ள தடை விதித்து மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி உத்தரவிட்டார் ..
இதேபோல் காஞ்சிபுரத்தில் முக்கிய புகழ் பெற்ற தலங்களான காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் , காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட அதிகளவில் பக்தர்கள் கூடும் திருக்கோவில்களிலும் இன்று முதல் மூன்று நாளைக்கு தரிசனம் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களான திருப்போரூர் கந்தசாமி கோவில், குமரன்குன்றம் முருகர் கோவில் ஆகிய இரு கோவில்களிலும் 2 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் சாமி தரிசனம் ரத்து என அறிவிப்பு இரவுக்கு மேல் வெளிவந்ததால் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை சாமி தரிசனம் மேற்கொள்ள கோயிலுக்கு செல்லும்போது சாமி தரிசனம் ரத்து எனும் அறிவிப்பு பலகை கண்டு வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் காவடியுடன் வந்த சில பக்தர்கள் மூடிய கோவில் வாசலில் கற்பூரம் ஏற்றி படையலிட்டு சென்றனர். பக்தர்களுக்கு கோவில்களில் அனுமதி இல்லாத காரணத்தினால், அரசின் உத்தரவை பக்தர்கள் மீறாமல் இருப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..