தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சமீபகாலத்தில் புயல் மற்றும் மழை காரணமாக சென்னை அடிக்கடி மோசமான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அதிக மக்கள்தொகை, கட்டிடங்கள் எண்ணிக்கை உயர்வு, நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு என பல காரணங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.


சென்னைக்கும் பெருமழைக்கும் ஏழாம் பொருத்தமாகவே இதுவரை இருந்து வரும் சூழலில், சென்னையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வரலாற்றில்  மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய புயல்கள் பற்றி காணலாம்.


1994ம் ஆண்டு புயல்:


1994ம் ஆண்டு வீசிய புயலானது சென்னை வரலாற்றிலே மிகவும் மோசமான புயல் ஆகும். இந்த புயலால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்து போனது. அந்த புயலின்போது காற்று மணிக்கு 120 கி.மீட்டர் முதல் 140 கி.மீட்டர் வரை வீசியது. சென்னையைத் தாக்கிய புயல்களிலே மிகவும் மோசமான புயல் என்று அந்த புயல் அதுவே ஆகும். அந்த புயல் காரணமாக 2 நாட்களில் மட்டும் 350 மி.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. அந்தாண்டு அக்டோபர் 31ம் தேதி வீசிய அந்த புயலால் 69 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


ஜல் புயல்:


2010ம் ஆண்டு சென்னையை தாக்கிய மிக மோசமான புயல் ஜல் புயல். அந்தாண்டு நவம்பர் மாதம் தென்சீனக்கடலில் உருவான இந்த புயல் சென்னையைச் சூறையாடிச் சென்றது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 74 ஆயிரம் பேரை இடமாற்றம் செய்தும், சுமார் 54 பேர் இந்த புயல் காரணமாக உயிரிழந்தனர். மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் இந்த புயல் சென்னையைக் கடந்தது.


தானே புயல்:


2011ம் ஆண்டு சென்னையைத் தாக்கியது தானே புயல். கடலூர் – புதுச்சேரி இடையே 2011ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கரையை கடந்தது தானே. சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம், சூறைக்காற்று உள்ளிட்ட சேதங்களால் மொத்தம் 48 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் இந்த புயலால் மிகவும் மோசமான பாதிப்பைச் சந்தித்தது.


நீலம் புயல்:


ஜல், தானே புயல்களைத் தொடர்ந்து அடுத்தாண்டே சென்னை எதிர்கொண்ட மற்றொரு புயல் நீலம் புயல். மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் மாமல்லபுரத்தில் கரையை கடந்த இந்த புயலால் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இந்த புயல் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 2012ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தாக்கிய இந்த புயலால் சென்னை மோசமான பாதிப்பைச் சந்தித்தது.


வர்தா புயல்:


சென்னையை உலுக்கிய புயல்களில் வர்தா புயல் மறக்கவே முடியாது. 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய இந்த புயலால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்தது. பெரியளவு மழைப்பொழிவு இல்லாவிட்டாலும் சூறைக்காற்று காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாய்ந்தது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒட்டுமொத்த சென்னையையும் புரட்டிப்போட்ட புயல்களில் வர்தா புயல் முக்கியமான புயல் ஆகும்.


மிக்ஜாம் புயல்:


கடந்தாண்டு சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் சென்னைவாசிகள் மறந்திருக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த சென்னையையும் ஸ்தம்பிக்க வைத்த இந்த மிக்ஜாம் புயலால் மழை சுமார் ஒன்றரை நாட்கள் கொட்டித் தீர்த்தது. இந்த மழை காரணமாக வேளச்சேரி, தாம்பரம், வியாசர்பாடி, அம்பத்தூர், மணலி உள்ளிட்ட பல நகரங்களில் தண்ணீர் ஆள் உயர அளவிற்கு தேங்கியது. ஒரு வாரத்திற்கும் மேலாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.


இந்த புயல்களுக்கு நிகரான தாக்கத்தை கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையும், அதனால் ஏற்பட்ட பெருவெள்ளமும் ஏற்படுத்தியது. சென்னையைத் தாக்கிய இந்த மோசமான புயல் மற்றும் பெருமழை காலங்களில் மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர் போன்வற்றிற்காக மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறாவிட்டாலும் சென்னைவாசிகள் கடந்த கால மோசமான அனுபவங்களால் அச்சத்துடன் உள்ளனர். 1994ம் ஆண்டுக்கு முன்பு சென்னையைத் தாக்கிய புயல்கள் பற்றிய தகவல்கள் போதியளவில் கிடைக்கவில்லை. சுமார் 15க்கும் மேற்பட்ட புயல்கள் இதுவரை சென்னையைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.