11 ஆயிரம் நபர்கள்:


மாண்டஸ் புயல் காரணமாக இரவு முழுவதும் 11 ஆயிரம் மின் துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர் மேலும் மின் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்திருந்தது.


சென்னையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடந்தது.  இதையடுத்து, மாமல்லபுரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


மாமல்லப்புரம் மட்டுமல்லாமல் பலத்த காற்று மற்றும் கன மழை பெய்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இந்நிலையில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசிய போது, 


"சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 355 துணை மின் நிலையங்களில்,   10 மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 22kv, 11kv, 400 என 602 பீடர்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் காற்றை மிக வேகமாக வீசியதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதன் காரணத்திற்காகவும் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.  


மதியத்திற்குள் மின் விநியோகம்


இரவு முழுவதும் 11 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மின் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் இன்று மதியத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் சீராக மின்விநியோகம் வழங்கப்படும்" எனவும் தெரிவித்தார்.  மேலும் எந்தெந்த இடங்களில் மின்கம்பங்கள் பழுது ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு மேற்கொண்டு சீரமைத்த பின்னரே மொத்தமாக எத்தனை இடத்தில் பழுது ஏற்பட்டது என்பது குறித்து தெரிவிக்க முடியும் என்றார். 


மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரம் முறிந்துள்ளது. மரம் முறிந்து விழுந்த இடத்தில் மாநகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி சீரமைப்பு பணிகளை முடித்தப்பின் மின் ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். 


மழை நிலவரம்:


புயல் கரையை கடந்தாலும் ஒரு சில பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருப்பதால் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காட்டுப்பாக்கம் 16 செ.மீ, வில்லிவாக்கம் 6 செ.மீ, புழல் 10 செ.மீ, பூந்தமல்லி 10 செ.மீ, சத்தியபாமா பல்கலைக்கழகம் 7 செ.மீ, பள்ளிக்கரணை 7 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழைப்பொழிவு பெய்துள்ளது என்று கூறினார். புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 70 முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசி உள்ளது எனவும் வட உள்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆயுவு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.