Cyclone Mandous: மாண்டஸ் புயலினால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்தடை ஏற்பட்டது. மாண்டஸ் புயலினால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை இடைவிடாது பெய்தது.


இதனால் தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் மின்சாரத்தினை துண்டித்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். நேற்று இரவு மட்டும் சென்னையில் 300 மரங்கள் வேரோடு சாய்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.


குறிப்பாக, சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தடைபட்ட மின்சாரம் இதுவரை மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. அதிலும் குறிப்பாக, திருவெற்றியூர் , வியாசர்பாடி , பெரம்பூர் , கொடுங்கையூர், மாதவரம், காசிமேடு மற்றும் வளாசரவாக்கம் பகுதிகளில் இப்போது வரை மின்சாரம் இணைப்பு இல்லாமல் உள்ளது. 


மீட்புப் பணிகள் மற்றும் மின்சாரத்தினால் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதனை தடுக்கவும், மீட்பு பணிகளில் மட்டும் 11 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.