கடலூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் அன்பு. இவருக்கு சொந்தமான விசைப்படகில், நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த சபரி, செந்தில்குமார், சிங்காரவேல் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். நேற்று மதியம் 2 மணி அளவில் சென்னை நீலாங்கரை அருகில் சுமார் 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விசைப்படகின் இன்ஜின் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அனைவரும் தீயை அணைக்க முயற்சி செய்து வெகு நேரத்திற்கு பின் அணைத்தனர். இருப்பினும் இன்ஜினில் ஏற்ப்பட்ட நெருப்பினால்  அந்த விசைப்படகு பழுதாகி நடுக்கடலில் நின்றது.



இதனால் சபரி உள்ளிட்ட 10 பேரும் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தவித்தனர். பின்னர் அவர்கள், உதவி கேட்டு கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். அதன் பேரில் துறைமுகம் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரும், சென்னை மெரினா கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் மீட்பு படகு மற்றும் ஹெலிகாப்டருடன் நடுக்கடலுக்கு விரைந்து சென்றனர். பின்னர் விசைப்படகுடன் நடுக்கடலில் தவித்த 10 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.



மேலும் பழுதான விசைப்படகை, இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தாங்கள் சென்ற கப்பலுடன் கயிறு கட்டி பத்திரமாக கரைக்கு இழுத்து வந்தனர். அதற்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த வருடத்தின் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி  இரண்டு மாதங்கள் அமலில் இருந்தது, அதன்பின் ஜூன் மாதம் 15 ஆம் தேதி தடைக்காலம் முடிந்தப்பின்னும் , தற்பொழுது  கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இழு வலைகளை பயன்படுத்த அதிகாரிகளால் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், அதிகளவில் மீன் பிடிக்கும் நோக்கத்தில் கடலூர் மீனவர்கள் சென்னை அருகே சென்றதும், அப்போது தான் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டு நடுக்கடலில் தவித்ததும் தெரியவந்தது. 



இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் அப்படி பாதிக்கப்பட்டவர்களில் மீனவர்களும் அடங்குவர், அப்படியாக இந்த கொரோனா காலகட்டத்தில் கடலுக்கு செல்லமுடியாமலும் அப்படியே சென்றாலும் அதனை சரியாக விற்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர் இந்த நேரத்தில் இழுவலை மற்றும் சுருக்குமடி வலையினை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தான் மீனவர்கள் இவ்வளவு தொலைவுக்கு சென்று மீன்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.