வியாசர்பாடியில் பரோட்டா சாப்பிட்டு படுத்து உறங்கிய 27 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, வியாசர்பாடி சர்மா நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கார்த்திக் வயது 27. இவர் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.


நேற்று இரவு 10 மணி அளவில் வியாசர்பாடி  பகுதியில் உள்ள சாலை ஓர ரோட்டுக் கடையில் பரோட்டா வாங்கி வந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கினர். இரவு 11 மணி அளவில் கார்த்திக்கு க்கு மட்டும் குமட்டல் மற்றும் வாந்தி வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 


அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நிலை மோசமாக உள்ளது என்று கூறி மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கின் உறவினர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் மயக்கம் அடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். நேற்று (ஜன.29) இரவு பரோட்டா சாப்பிட்டு விட்டு அதன் பிறகு கார்த்திக் பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் ஜூஸ் ஒன்றைக் குடித்துள்ளார். அதன் பிறகு வேறு எதுவும் சாப்பிடவில்லை. இந்நிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பரோட்டா சாப்பிட்டு விட்டு  உறங்கிய நிலையில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.


ஆனால் கார்த்திக் மட்டும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எம். கே.பி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


உடற்கூராய்வு அறிக்கை வந்தவுடன் கார்த்திக் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல் துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


முந்தைய சம்பவம்


இதேபோல் முன்னதாக ஒடிசாவின் பால்சோர் (Balasore) மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Barkhuri ME பள்ளியில் பல மாணவர்கள் தங்களுக்கு தலைவலி மற்றும் வயிற்று வலி இருப்பதாக கூறியதால் அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையில், ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அந்தப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அதனாலேயே அவர்களின் உடல்நிலை ஏதோ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள சோரோ மருத்துவமனைக்கு ( Soro Hospital ) சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். 


பள்ளி மாணவர்களுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.  இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 முன்னதாக சோரோ மருத்துவமனை நிறுவனர் வெளியிட்டுள்ள செய்தியில் மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.