சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேரத்தில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட மகத்தான திட்டம்தான் அம்மா உணவகம். இதை கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் செய்தார்கள். பல பேரின் பசியாற்றிய ஒரு திட்டம், குறிப்பாக சென்னையில், எளியவர்களை தன் கைகளில் தாங்கிக்கொண்ட திட்டமிது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு கொண்டு வந்த திட்டம்தான் அம்மா உணவகம். மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நிர்வகிக்கப்படும். அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் மலிவு விலையில் உணவு கிடைக்கும்.


காலையில் 1 ரூபாய்க்கு இட்லியும், மதிய வேளைகளில் 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், தக்காளி சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் என கலவை சதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இரவு நேரத்தில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு வேளையில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே விற்பனை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தக்காளி சாதம் விற்பனை செய்யப்படுகிறது. சில உணவகங்களில் இட்லியும், தக்காளி சாதமும் வழங்கப்படுகின்றன. 




எதற்காக சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தை அறிய முற்பட்டபோது, அம்மா உணவகங்களுக்கு கோதுமை சப்ளை நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், அம்மா உணவகங்களால் மாநகராட்சிக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், இதன் காரணமாக அம்மா உணவகங்களின் மூலம் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியாக கோதுமை மாவு வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


சப்பாத்தி நிறுத்தப்பட்டிருப்பது ஏழை மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கி பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வயதானவர்கள் பலர் சர்க்கரை நோயாளிகளாக இருக்கின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் அம்மா உணவகங்களில் சப்பாத்தி சாப்பிட்டு வந்தது உற்சாகத்தை கொடுத்ததாகவும், சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ள வருத்தத்தை கொடுத்துள்ளதாகவும் கூறினார்கள்.


திமுக ஆட்சிக்கு வந்த பின்பும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்களின் பசியை போக்குகின்ற அம்மா உணவகங்கள் தங்கு தடையின்றி செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், நிதி நெருக்கடியால் தத்தளித்து வரும் அம்மா உணவகங்கள் மீது கூடுதல் கவனம், செலுத்தி முன்பை போல் தங்கு தடையின்றி அனைத்து உணவுகளும் கிடைக்கப்பெறச் செய்ய வேண்டும் என்பதே ஏழை மக்களின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண