கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின்,கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்களுக்கும் போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி முதலில் போடப்பட்டபோது பல்வேறு தரப்பினரும் வதந்திகளுக்கு மத்தியில் தடுப்பூசி போட தயக்கம் காட்டினர். இதையடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் பேராயுதம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 70% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவானதாக ஆய்வில் தெரிய வந்தது. மதுபானங்களை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் வாங்கும்போது, கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை டாஸ்மாக் கடையின் பணியாளர்கள் பதிவு செய்யும் வகையில் அசல் சான்றினையோ அல்லது கைபேசியில் வரப்பெற்ற குறுஞ்செய்தியையோ காண்பித்தால் மட்டுமே மதுபானங்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம் போன்ற உத்தரவுகளும் அதிரடியாக பிறப்பிக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ராயபுரம் மண்டலத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 6-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 22 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்பட்டது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 50 ஆயிரம் முகாம்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு பல்வேறு பரிசு பொருட்கள் அந்நாட்டு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டன. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தற்போது 100கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பல்வேறு விழாக்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் தனியார் பங்களிப்புடன் பல்வேறு பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் தவணை தடுப்பூசி போடுவோருக்கு அந்தந்த முகாம்களில் குலுக்கல் முறையில் வெள்ளிக்காசு, குக்கர், நான் ஸ்டிக் தவா, ஹாட் பாக்ஸ், 3 லிட்டர் சமையல் எண்ணெய் உள்பட பல்வேறு பரிசுகளை மாநகராட்சி வழங்கி வருகிறது. சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.