கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்து, தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் மட்டும் 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் இருந்து சிசிக்சைப் பெற்று வருகின்றனர்.
அண்மையில்கூட, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். அதிலும், தமிழகத்தில் தலைநகர் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், மெல்ல, மெல்ல கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், எச்சரிக்கையாக இருந்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி கூறியிருந்தார்
இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரே வீட்டில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ளோருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தச்சூழலில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, சுகாதாரத்துரை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கினர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் 370 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகை கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், இந்தத் தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டிது அவசியம் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், சென்னை மற்றும் அதன் புறநகரில் உள்ள 4 கல்லூரி மாணவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அந்த இடங்களில் நோய் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்,
மேலும், தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனாவால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் மிதமான பாதிப்பே இருப்பதால், யாரும் பதட்டம் அடையத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில், தற்போது கூடுதல் கவனத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது வீடுகளில் இருவர் மற்றும் அதற்கு மேலும் ஏற்படும் “கிளஸ்டர்” தொற்றை கவனத்தில் கொண்டு, கூடுதல் நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது ஏற்படும் தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சம் தேவையில்லை என்றாலும், உரிய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முகக் கவசம், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் தற்போதைய நிலையில் 15 இடங்கள் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.